Latest News

July 16, 2011

விமான எதிர்ப்பு பீரங்கிகள் லிபியாவில் மாயம்: அமெரிக்கா கவலை
by admin - 0

லிபியாவில் விமான எதிர்ப்பு பீரங்கிகள் காணாமல் போனது குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
அவை பயங்கரவாதிகள் கையில் சிக்கியிருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.
லிபியாவில் ஆட்சியாளர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில், அரசு எதிர்ப்பு படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் அந்நாட்டில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இந்த நிலையில், வீரர்கள் எளிதில் சுமந்து செல்லும் வகையில் அமைந்த எஸ்.ஏ-7 ரக விமான எதிர்ப்பு பீரங்கிகள் ஏராளமான எண்ணிக்கையில் மாயமாகியிருப்பது தெரியவந்துள்ளது. ரஷிய தயாரிப்புகளான இந்த வகை விமான எதிர்ப்பு பீரங்கிகள், அதிபர் கடாபியின் ஆதரவுப் படையினர் விட்டுச் சென்ற ஆயுத கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தவையாகும்.
காணாமல் போன பீரங்கிகள் அனைத்தும் அல்-காய்தா போன்ற பயங்கரவாதிகள் கைகளில் சிக்கினால், அவை பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளதாக அமெரிக்க படையினர் அச்சம் தெரிவித்துள்ளனர். நேட்டோ படைகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் லிபியாவின் கை ஓங்கிய ஆரம்ப நாள்களில் இந்த வகை பீரங்கிகள் மாயமாகத் தொடங்கின. பிறகு அது கட்டுப்படுத்தப்பட்டது.
இப்போது லிபியாவின் மேற்கு மாகாணப் பகுதியில் மீண்டும் கடாபி ஆதரவுப் படையினர் முன்னேறி வரும் நிலையில் பெரும் எண்ணிக்கையில் பீரங்கிகள் காணாமல் போயிருப்பதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
லிபியாவின் எல்லையோரப் பகுதிகளில் ஆயுத விற்பனை என்பது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது.
காணாமல் போன இந்த விமான எதிர்ப்பு பீரங்கிகள் கள்ள மார்கெட்டில் விற்பனை செய்வதற்காக திருடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், காணாமல் போன பீரங்கிகளை மீட்கவும், அவற்றை பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உதவி செயலர் அண்ட்ரூ ஜே ஷாப்பிரோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments