Latest News

May 22, 2011

சிக்க வைத்த "செக்!': கனிமொழி விவகாரத்தில் சி.பி.ஐ.,க்கு கிடைத்த ஆதாரம்
by admin - 0


புதுடில்லி: "ஸ்பெக்ட்ரம்' ஊழல் விவகாரத்தில், கனிமொழிக்குத் தொடர்பு உண்டு என்பதை ஆணித் தரமாக நிரூபிக்க, கலைஞர் "டிவி' துவங்க, தனியார் நிறுவனம் மூலம், காசோலை (செக்)வடிவில் வந்த பணம் தான், மிகப் பெரிய ஆதாரமாக சி.பி.ஐ.,க்குக் கிடைத்துள்ளது.

ஊழல் விவகாரங்களில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகள், காசோலை மூலம் நடப்பது மிக அரிதே; பணமே கை மாறும். அப்படி மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கான கணக்குகளும், சம்பந்தப்பட்ட நபர்களின் உண்மைப் பெயரில் இருக்காது. பொய்ப் பெயரிலோ, வேறு யாருடைய பெயரிலாவது நடக்கும்.ஆனால், "2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், 214 கோடி ரூபாய் மதிப்புள்ள பணப் பரிமாற்றம், காசோலை மூலம் நடந்ததே, தற்போது, கனிமொழியைச் சிறைக்கு அனுப்பியுள்ளது.

நேற்று முன்தினம், டில்லி, திகார் சிறையில் கனிமொழியை அடைத்த பின், சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:இந்த விவகாரத்தில், காசோலை மூலம் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது, எங்கள் அதிர்ஷ்டம். மூளையைக் குழப்பும் புதிர் போல, ஆங்காங்கே சிதறிக் கிடந்த தகவல்களை ஒன்று திரட்ட, இந்தப் பணப் பரிமாற்றம் தான், முக்கிய ஆதாரமாக விளங்கியது."ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டுக்காக வாங்கப்பட்ட லஞ்சப் பணத்தின் ஒரு பகுதி, கலைஞர் "டிவி'க்குச் சென்ற பாதையை மட்டும் தான் தற்போது எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது. அதன் வழியாகத் தான், அந்த, "டிவி'யில், 20 சதவீத பங்கு வைத்துள்ள கனிமொழி சிக்கினார்.மீத லஞ்சப் பணம் எங்கு சென்றது என்பதைக் கண்டறிய, மொரீஷியஸ் நாட்டுக்குச் செல்ல உள்ளோம். அங்கு, கணிசமான தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.சுப்பிரமணியசாமி கூறியுள்ளது போல், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான பணப் பரிவர்த்தனைகளும், இந்த விவகாரத்தில் நடந்துள்ளதா என்பதை, நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், நிரா ராடியா ஈடுபட்டதாக நாங்கள் கருதவில்லை. எனினும், வோல்டாஸ் நிலம் தொடர்பான விவகாரங்களில், அவர் தலையீடு இருப்பது குறித்து, நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்.மேலும், 2001-07ம் ஆண்டுகளில் நடைபெற்ற, "ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு விவகாரம் தொடர்பான புலனாய்வை, நாங்கள் விரைவில் துவங்க உள்ளோம். அதற்கான ஆரம்ப கட்ட விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு, சி.பி.ஐ., அதிகாரிகள் கூறினர்.
like me








« PREV
NEXT »

No comments