தென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய பரமதேவா மட்டு.மண்ணின் முதல் மாவீரனின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.34 ஆம் ஆண்டு நினைவில், மட்டக்களப்பு மண் பெற்றெடுத்த மறத்தமிழ் வீரன், இந்தமண்ணில் விடுதலைத்தீயை மூட்டிய தமிழ்த்தேசிய் விடுதலைப்போராளி, ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் எண்ணங்களில் உறைந்திருந்த உன்னதமான இலட்சியத்தின் அடையாளம். வீறுகொண்டெழுந்த தன்னலமற்ற உண்மைப்போராளி. எரியும்தணலாக,அணையா விடுதலை நெருப்பின் தெந்தமிழீழத்தின் மூத்தபோராளி. மட்டக்களப்பின் தன்னலமற்ற தானைத்தளபதி லெப்.ராஜா (இரா.பரமதேவா)
கிழக்குமண்ணில் எழுந்த தமிழின விடுதலை உணர்வு தற்கொடையின் உச்சத்தில் தமிழின நெஞ்சங்களைத் தொட்டுநிற்கின்றது.ஒவ்வொரு தமிழ்த்தேசிய உணர்வாளனும்,ஒவ்வொரு விடுதலை வீரனாக மாறினார்கள்.
சுமார் 6 தசாப்தகால விடுதலைப்போராட்டத்தில் தாயகமண் என்ற அடையாளம் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைத்ததாகவே அரசியல் விடுதலை எழுச்சியிலும், ஆயுதவிடுதலைப் போர் எழுச்சியிலும் அமைந்திருந்தன.
என்றும் தமிழர் தாயகம் என்பது வடக்கும் கிழக்குமாக என்றும் பிரிக்கமுடியாத ஒன்றுபட்ட தமிழர் நிலமாகும்
திருமலையில் சிங்களத்தேசியக்கொடிக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கையின் போது சுட்டுக்கொல்லப்பட்டு வீரச்சாவடைந்த விடுதலைவீரன் நடேசன் மூட்டிய விடுதலைத் தீ வாழ்வா?சாவா? என்ற வரலாற்றுப் போரில் அதேமண்ணிலிருந்து எழுந்த விடுதலைப்புயல் லெப்.சீலன்,மூதூரிலிருந்து புறப்பட்ட புரட்சிவீரன் மேஜர்.கணேஸ் ஆகியோர் முதல் வித்தாக இந்தமண்ணில் வீழ்ந்து விடுதலைப்புரட்சிக்கு வித்திட்டனர். இவர்களின் வரிசையில் திருமலையில் லெப்.கேணல் புலேந்திரன்,
மட்டக்களப்பில் லெப்.பரமதேவா,மேஜர்.பிரான்ஸிஸ், கப்டன் ஜிம்கெலி, லெப். கஜன்
அம்பாறையில் விடுதலைக்கான முதல் வித்தாக வீழ்ந்த வீரவேங்கை நிசாம், மற்றும் லெப்.சைமன் , மேஜர்.டேவிட்,மேஜர்.அன்ரனி என நீண்டுகொண்டே சென்றது.
துரோகங்கள் பிரதேசவாதமாக மாறியபோதும்,மாறுகின்றபோதும் தமிழ்மண்ணின் விடுதலையென்பது தமிழர்களின் ஒரே மூச்சாக,ஒரே குரலாக ஒலித்துக்கொண்டேயிருக்கின்றது.
பிராந்தியவாதிகள்,பேரினவாதிகள்,ஏகாதிபத்தியவாதிகள், என்போரால் பிரித்தாளும் துரோகங்கள் தலைதூக்கியபோதும் வித்தாக வீழ்ந்த வீரர்கள் நினைவாக எங்கள் சொத்தான சொந்தத்தமிழ்மண்ணை மீட்டு தன்னாட்சித்தமிழ்மண்ணில் தலைநிமிர்ந்து வாழும்காலம் தமிழரின் பொற்காலம் என்று தமிழரின் வரலாறு அந்நாள் சொல்லும்.
தூங்கிய விடுதலை ஆன்மா விழித்தெழும்போது துரோகத்தின் எல்லையும் முடிந்து அழிந்துவிடும் என்பது காலத்தின் நியதியாகும்.
தமிழரின் வரலாற்றில் விடுதலைப்போராட்டப்பதிவாக காலத்தின் கட்டாயத்தில் இந்நாள் எழுதுகின்ற உண்மையும்,உணர்வுமான முதல்வித்தாக மட்டுமண்ணில் வீழ்ந்த வரலாற்றுநாயகன் புலியாகஎழுந்த புறநானூற்று வீரன் லெப்.பரமதேவா என்பது மட்டுமண்ணின் விடுதலை வரலாற்றின் ஆரம்பமாகும்.
1984 ம் ஆண்டு யூலை மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத் தாக்குதல் தளபதியாக ராஜா என்னும் பெயருடன் பரமதேவா தாய் மண்ணில் கால் பதித்தார்.
1983 ம் ஆண்டு யூலை இலங்கைத் தீவில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பைத் தொடர்ந்து தமிழ் இளையோர்களின் எழுச்சி, புரட்சிவாத உணர்வாக மாறியதன் விளைவில் பரமதேவா என்ற விடுதலை வீரனின் பயணம் ஒரு தளபதியாக, சிங்களப் படைகளை எதிர்த்துத்தாக்கும் களவீரனாக எம்மைக் காண வைத்தது.
சிங்களப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தும் நோக்கோடு தலைவர் அவர்களினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தாக்குதல் தளபதிகள் என்ற வகைக்குள் தமிழீழத்தின் தாக்குதல் தளபதியாக கேணல் கிட்டு அவர்கள் செயல்பட்டார்.
மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தின் தாக்குதல் தளபதியான ராஜா (பரமதேவா) தாய் மண்ணுக்கு வருகை தந்திருந்தபோது தமிழீழப் விடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினர்கள் உட்பட்ட சில போராளிகள் மாத்திரம் தங்கியிருந்தனர்.
தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் பல இயக்கங்கள் உருவாக்கப்பட்ட நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பம் மட்டக்களப்பில் புரட்சிவாத இளையோர்களின் புனிதப் பயணமாக அமைந்திருந்தன.
ஒரு போராளியாக, ஒரு விடுதலை வீரனாக, தமிழர் படையின் சிறப்பு மிக்க வீரனாக திகழ்ந்த பரமதேவா தாய் மண்ணில் தன்னைப் பெற்றெடுத்த தாயைப் பார்ப்பதற்கு முதல் எத்தனையோ தமிழ்த் தாய்மாரின் கண்ணீருக்கு காரணமான சிங்களப் பேரினவாதத்தின் படைகள் மீது தாக்குதலை நடத்திவிட்டு தனது தாயைச் சந்திப்பேன் என்று செய்தி அனுப்பிவிட்டு தாக்குதல் ஒன்றுக்கான ஆயத்தத்தில் தன்னை ஈடுபடுத்தினார்.
ஒரு போராளியின் உருவாக்கம் மொழிப்பற்று, இனப்பற்றிலிருந்து ஆரம்பிக்கின்றது. சூழ்நிலையின் தாக்கத்துக்குள் இல்லாமல் சிறு வயது முதல் தன் இனத்தின் விடுதலையில் எழுந்தவர்கள், தனது குடும்பத்தின் விருப்போடு தமிழினத்தின் போராளியாகப் புறப்பட்டவர்களின் வரிசையில் மட்டக்களப்பில் முதல் விடுதலை வீரனாக களம்கண்ட காவிய நாயகன் லெப்.ராஜா என்பதில் விடுதலையை நேசிக்கும், விடுதலை பெற்றவர்களாக வாழ வேண்டும் என்கின்ற அனைத்து தமிழ் மக்களின் நெஞ்சினில் ஏந்தப்பட்ட விடுதலை நெருப்பின் அடையாளமாகும்.
இவ்வாறு உணர்வான விடுதலைப் போராளியை தாயக விடுதலைக்கு ஈந்த அன்னையை எண்ணிப்பெருமிதம் கொள்வதோடு அணையாத விடுதலை நெருப்பாக மட்டக்களப்பில் எரிந்து கொண்டிருக்கும் லெப். ராஜா அவர்களின் வரலாறு.
தமிழர் தாயகம் மீதான நில அபகரிப்பு, ஆக்கரமிப்பு, தமிழின அழிப்பு, மொழிப் புறக்கணிப்பு என்பன தேசிய இன அடையாளத்தை அழிக்கும் செயலாக சிங்களப் பேரினவாதத்தின் ஆயுத அடக்குமுறைக்கு பதில் சொல்லும் நிலையில் மாறியபோது புறப்பட்ட இளையோர்களில் ஒருவராக பரமதேவாவின் தன்னலமற்ற தாயக விடுதலைப்பற்று வெளிப்படுத்தப்பட்டிருந்ததனால் ஒரு உண்மைப் போராளியை எமது மண் பெற்று பெருமைகொண்டது.
பல இயக்கங்களின் உருவாக்கமும், இவற்றில் உள்நுழைந்த தன்னல வாதிகளுக்கு மத்தியில் மக்கள் பரமதேவாவை ஒரு விடுதலைப் போராளியாக ஏற்றுக் கொண்டதை அன்றைய மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மக்களின் உணர்வுகளிலிருந்து அறியமுடிந்தது.
1984 .09 .22 ம் நாள் அன்று களுவாஞ்சிக்குடி சிங்களகாவல் நிலைய அழிப்பில் முதல் வித்தாக வீரவேங்கை ரவியுடன் வீழ்ந்த லெப்.ராஜாவின் வீரச்சாவுடன் புரட்சிகர விடுதலைப் பயணத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டக்களப்பில் தொடங்கி வைத்தது. தன்னலமற்ற, நேர்மையும், அர்ப்பணிப்பும் கொண்ட பரமதேவா அவர்களின் இழப்பு தலைவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
கிழக்கின் பெரும் வீரனாக, தலைமைக் தளபதியாக செயலாற்றி விடுதலை இயக்கத்தை நடத்தக்கூடிய வல்லமை கொண்டவரான பரமதேவா பயணத்தில் தொடர்ந்திருந்தால் இன்றைய அவலம் மட்டக்களப்பில் ஏற்பட்டிருக்காது.
மட்டக்களப்பின் புறநகர் பகுதியில் அமைந்தள்ள நாவற்கேணி மறைவிடத்தில் பரமதேவா அவர்களும் ஏனைய போராளிகளும் தங்கியிருந்தனர். போராட்டப் பயணத்தில் மக்களுக்கு அறிமுகமான பல போராளிகள் இணைந்திருந்ததனால் மக்களின் ஆதரவு நன்றாகவே இருந்தது. முதல் தாக்குதலுக்கான திட்டம் இங்கிருந்துதான் உருவாக்கப்பட்டன. தலைவரின் ஆணையில் தாக்குதல் தளபதியாக களமிறங்கிய பரமதேவாவுக்கு தலைவரின் ஆலோசனையும் நிறைவாகக் கிடைக்கப்பெற்றிருந்தன.
1983.09.23 ம் நாள் மட்டக்களப்பு தமிழ் மக்களின் முழு ஆதரவோடு தகர்க்கப்பட்ட சிறையிலிருந்து தமிழ்ப் போராளிகள் வெளியேறிய போது பரமதேவா உட்பட சிலர் தாயக மண்ணில், பரந்த வெளிச்சத்தில், விடுதலை வானில் மறைக்கப்படாத ஒளியைத் தேடிய நிலையில் தமிழர் எழுச்சியின் புரட்சி விடுதலை வடிவமான மேதகு வே .பிரபாகரன் அவர்களின் உறுதிமிக்க விடுதலைப்பாதை அவர்களை பின்தொடரவைத்தன.
சிங்களப் பேரினவாதத்தைப் பொறுத்தவரையில் பிரபாகரன் அவர்களின் வீரம், தன்மானம் என்பன தமிழரைத் தலை நிமிர்ந்து வாழவைக்கும் என்ற எண்ணம், பரமதேவா அவர்களை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இ,ணைய வைத்ததன் மூலம், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் , இந்தியாவில் முதல் பாசறையில் பயிற்சி பெறுவதற்கு பயணிக்கவைத்தன.
விடுதலைப் புலிகளின் பாசறையில் பரமதேவா
இலங்கைத் தீவில் மாபெரும் தமிழின அழிப்பைத் தொடர்ந்து 1983 ம் ஆண்டு இறுதிப் பகுதியிலிருந்து இந்திய அரசின் அழைப்பில் தமிழ் இளையோர்கள் அணிகள் படைத்துறை பயிற்சி பெறுவதற்காக படகின் மூலம் சென்று கொண்டிருந்தனர். இப் பயிற்சியை பெறுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட முதலாவது பயிற்சிப் பாசறையில் பரமதேவாவும் இணைந்திருந்தார்.
தலைவரின் நெஞ்சினில் ஆழமாக வேரூன்றியிருந்த கிழக்கு போராளிகளில் பரமதேவா ஒருவர் என்பதை தலைவர் அவர்களின் எண்ணங்களின் வெளிப்பாட்டிலிருந்து அறிந்து கொள்ளமுடிகிறது.
தாய் மண்ணில் விடுதலைப் புலிப் போராளியாகப் களத்தில் பரமதேவா
யாழ்.மாவட்டத்திலிருந்து வன்னி பெருநிலப்பரப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் போராளிகளோடு சிலகாலம் தங்கியிருந்த பாமதேவா முல்லை மண்ணில் ஓட்டுச்சுட்டான் ஊரில் நிலைகொண்டிருந்த சிங்கள காவல் நிலையத்தை தாக்கியழிக்கும் நடவடிக்கையில் முன்னணி வீரனாக களமிறங்கினார்.
ஒரு தமிழன்னைக்கு, தாய் மண்ணில் பிறந்த பரமதேவா பாலகப்பருவம் தாண்டிய பள்ளிப் பருவத்தில் தமிழ் மக்களின் விடுதலையை தோள்மீது சுமந்து பயணித்து தமிழீழ அன்னையின் வீரப் புதல்வர்களில் ஒருவரானார்.
பரமதேவா (லெப். ராஜா) என்ற மாவீரனின் வரலாற்றுப் பதிவில் சாதாரண சம்பவங்களாக அரசியலைப் பிரித்துப் பார்க்க முடியவில்லை. ஏனெனில் எழுச்சி அரசியல் தொடங்கிய வேளையில் இவருடைய விடுதலை எழுச்சியும் மக்கள் மத்தியில், ஒரு புரட்சித் தீயை மூட்டியதால், வரலாறும் அரசியலோடு இணைந்ததாக பதியப் படவேண்டிய நிலையில் இருக்கின்றது.
இன்றைய தமிழ் இளையோர்களுக்கெல்லாம் முன் மாதிரியான, எழுச்சி வீரனாக கூறக்கூடிய பரமதேவா (லெப் .ராஜா) என்ற தன்மானமிக்க, தமிழ் புரட்சியாளனின் வரலாறு, புதிய எழுச்சியை, புதிய அரசியலை, விடுதலைக் களத்தில் நிட்சயம் தோற்றுவிக்கும். மங்காது, மறையாது, புரட்சியாளர்களின் வரலாறு என்பதற்கமைய லெப். ராஜா (பரமதேவா) போன்றவர்களின் வரலாறும், காலம் காலமாக எமது மக்களின் சந்ததியோடு தொடர்ந்து செல்லும்.
விடுதலை அடையமட்டுமல்ல, விடுதலை பெற்ற பின்பும் இது தொடரும்.
மாசற்ற மறவனை பெற்றெடுத்த மட்டக்களப்பு மண் கண்ட வீரர்கள்பலர், இம் மண்ணில் களமாடி வீழ்ந்த 8000 க்கு மேற்பட்ட மாவீரர்களின் வரலாற்றின் ஆரம்பந்தான் பரமதேவா என்ற புரட்சி வீரனின் புதிய விடுதலை அத்தியாயம்.
எழுதப்படுகின்ற எமது போர்க்காவியத்தின் படைப்புகளில் மட்டக்களப்பின் தொடக்கத்தின் முதல் பக்கமாக பரமதேவா என்ற விடுதலைப் போராளியின் வரலாறு அமைந்திருக்கும்.
-ஈழம் ரஞ்சன்-
No comments
Post a Comment