September 25, 2015

மாமா இது யார் தெரியுமா? நான் தான். அப்பா செத்த பொழுது அப்பாவை கொஞ்சிக் கொண்டு இருக்கிறன்." -இது ஒரு வரலாறு இதை பதிவாக்குங்கள்

"மாமா இது யார் தெரியுமா? நான் தான். அப்பா செத்த பொழுது அப்பாவை கொஞ்சிக் கொண்டு இருக்கிறன்." சித்துக் குட்டி சொன்ன பொழுது ஜெனீவா முன்றலில் ஆவணப் படங்களை கூடாரம் கட்டி ஆதாரம் காட்டும் பணியில் அயராமல் ஈடுபட்டு வரும் கஜன் கண் கலங்கினார். 

உடனே ஓடி சென்று ஆவணப் படங்கள் அடித்து அவர் வெளியிட்ட புகைப்பட தொகுப்பு நூலை எடுத்து காட்டிய பொழுது சிந்து குட்டி மீண்டும் "இஞ்ச இருக்கிறன் அப்பாவோடு"  என்றாள்.

கட்டியணைத்து கஜன் என்னிடம் "அக்கா இது ஒரு வரலாறு.. இதைப் பதிவாக்குங்கள்" என்றார். 

நானோ ஊடகவியலார், நாட்டுப்பற்றாளர் சத்திய மூர்த்தி அண்ணாவின் இறுதி சடங்கு படத்தை வெறித்தபடி என்னை இழந்து கரைந்து கொண்டு இருந்தேன்....

சத்தியமூர்த்தி என்ற ஊடகப் போராளியோடு தொலைபேசியில் பேசிய அந்த நினைவுகள் நெஞ்சில் இறுக்கத்தை உருவாக்கியது.

இறுதிக் கணம் வரை மரணத்திற்கு அஞ்சாத அந்த ஊடகவியலாளன் புகைப்படத்தில் மட்டுமல்ல வரலாற்றிலும் நிலைத்து நிற்பதோடு என்னை போன்றவர்கள் எழுத்துக்களையும் வடம் இழுக்கின்றான்....

"அப்பா உங்களுக்கு விருப்பமா அம்மா? அப்பாவை நினைவு இருக்கா?" 

"ஓம்... அப்பா குட்டி எனக்கு விருப்பம். அப்பாவை நல்லா நினைவு இருக்கு" 9 வயதிலும் மழலை கொஞ்சும் மொழியில் கொஞ்சிப் பேசினாள். 

விழிகளை துடைத்து விட்டு சிந்துக் குட்டியை இறுகக்  கட்டி முத்தம் கொடுத்தேன்.  சத்தியமூர்த்தி அவர்கள் அவளில் உயிரையே வைத்திருந்தார். அவரின் தேவதை அவள்..இன்று எங்கள் இனத்தின் தேவதைகளில் ஒருத்தியாக தந்தையை இழந்து பரிதவிக்கும் அரும் செல்வம்.... 

சொல்லொணா துன்பங்களை அனுபவித்து உயிர் தப்பி உலகின் ஏதோ ஒரு கரையில் கரையொதுங்கிய மனைவி நந்தினி அக்காவும் செல்லக் குட்டி சிந்துவும் பட்ட வலிகள் வார்த்தைகளுள் சொல்லி விட முடியாதவை. 

ஒரு எழுதுகோலின் போராட்டத்தில் இன்று விழுதாக எங்கள் குலக் கண்மணியும்.... போராடுகின்றாள்.... 

அவள் நலமே வாழ வேண்டும்..

அப்பா இல்லை என்ற குறை தெரியாமல் எம் இனத்தின் ஒட்டு மொத்த அன்பும் அவளை சூழ வேண்டும். 

ஒரு எழுத்தாளனுக்கு மரணம்  இல்லை. அவனின் எழுத்துக்கள் இதோ...என் போன்றோர் எழுத்துக்களூடாக உலக வலம் வரும்... 

வீழ்கின்ற விதைகள் நாளைய விதிகளுக்கான விருட்சங்களை சுமக்கின்றன.  

நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தியின் நினைவுகளில் அந்தப் பொழுதில்  மனதுள் பீறிடும் உறுதியின் செறிவை வலுவாக உணர்ந்தேன். 

விழிகள் கலங்க வைத்த சிட்டு  சிந்து இன்னமும் என் நினைவுகளோடு வாழ்கின்றாள்....

கஜனின் புகைப்பட ஆவணம் ஒரு ஒன்பது வயது சிறுமியை தனது 7 ஆண்டுகள் பின்னோக்கி சென்று தந்தையின் இழப்பை மீட்டு உருக வைத்துள்ளது...கஜன் சொன்னது போல் " இது போல் வரலாற்று மகிமை மிக்க கணங்களை ஆவணப்படுத்தும் ஆவணங்கள்  நாளை எடுத்து வரும்"  

ஒவ்வொரு தமிழர்களும் வரலாற்றை ஆவணப்படுத்தும் அரும் பணிகளையும் வரலாற்றை மீட்டு எடுத்துரைக்கும் காலப் பணியையும் செய்வோமாக.



              

செந்தமிழினி பிரபாகரன்


No comments:

Post a Comment