July 06, 2016

பொருளாதார மத்திய நிலையம் பரந்தனில் அமைவதே பொருத்தமானதாகும்!

வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் வடமாகாணத்தின்  மத்திய பகுதியில் இலகுவான போக்கு வரத்தை மேற்கொள்ளக்கூடியதுமான வடமாகாணத்தில் அதிகமான மக்கள் பயனடையக்கூடியதுமான இடத்தில் அமைய வேண்டும் என்பதே வடமாகண மக்களில் எதிர்பார்ப்பகும்.

வடமாகாணத்தின் மத்திய பகுதி என நோக்கும்போது முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மாங்குளம் பகுதி காணப்படுகின்றது. வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த மக்கள் இலகுவான போக்குவரத்தை மேற்கொள்ளக்கூடிய ஐந்து மாவட்டங்களின் பிரதான போக்குவரத்து வீதிகள் சங்கமிக்கும் இடமாக பரந்தன் சந்தி காணப்படுகின்ற அதேவேளை சனத்தொகையில் அதிக மக்கள் எண்ணிக்கையைக் கொண்ட மாவட்டமான யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அண்மையாகவும் காணப்படுகின்றது.

வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் வடமாகாண மக்கள் பயனடையக்கூடியதாக மக்கள் விருப்பப்படியே அமைக்கப்பட வேண்டும். மக்களது விருப்புக்கு மாறாகவும் தூர நோக்கற்ற முறையிலும் அரசியல் நோக்கம் கருதியும் அமைக்கப்படுமானால் மக்கள் நன்மையடைவார்கள் என்பது கேள்விக்குரியதாகும். 

வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களை இணைக்கும் ஏ-9 வீதியும் மன்னார் மாவட்டத்தை இணைக்கும் ஏ-32 வீதியும் முல்லைத்தீவு மாவட்டத்தை இணைக்கும் ஏ-35 வீதியும் சந்திக்கும் முக்கிய இடமாக கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பரந்தன் சந்தி காணப்படுகின்றது.
வடமாகாணத்தில் விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள் போன்றோரது தேவைகளை பூர்த்திசெய்யக்கூடிய வகையிலும் அவர்களது வளர்ச்சிக்கு உதவக்கூடிய வகையிலும் பொருளாதார மத்திய நிலையம் அமைந்து வடமாகாண மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய வகையில் அமைய வேண்டும் என்பது அனைவரதும் எதிர்பார்ப்பாகக் காணப்படுகின்றது.

வடமாகாணத்தில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தமக்குள்ளே தீர ஆராய்ந்து மக்களுக்காகச் சரியான முடிவெடுத்து பொருத்தமான இடத்தில் அமைப்பதற்கு ஆவன செய்யவேண்டும் என்பது மக்களது கோரிக்கையாகக் காணப்படுகின்றது.

இதன் பெயரே வடமாகாண பொருளாதார மத்திய நிலையம் எனவே இது வடமாகாணத்தின் மத்திய பகுதியில்தான் அமையப்பெற வேண்டும்.

வடமாகாண மத்திய நிலையம் வடமாகாணத்தின் மத்திய பகுதியாகக் கருதப்படுகின்ற முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் அமைய வேண்டும் அல்லது மாங்குளத்திலிருந்து சில கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்த வடமாகாணத்தின் முக்கிய சந்தியாகவுள்ள கிளிநொச்சி பரந்தன் சந்திப் பகுதியில் அமைய வேண்டும் என்பதே வடமாகாண மக்கள் பலரது கருத்தாகவும் கோரிக்கையாகவும் காணப்படுகின்றது.

சிவேந்தன்.

No comments:

Post a Comment