மதிப்புக்குரிய தென்நிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களிடம் சுவிஸ் ஈழத்தமிழரவை உரிமையுடன் முன்வைக்கும் எண்ணக்கிடக்கைகள்!!!
மதிப்பிற்குரிய கலைஞர்களே மற்றும் படைப்பாளிகளே
தமிழக மக்களின் காவிரி நதிநீர் விவகாரம் போன்ற மக்கள் நலன்சார் அரசியல் விடையங்களிலும், தொடர்ந்தும் சிறீலங்கா பயங்கரவாத அரசால் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படும் ஈழத்தமிழர்கள் சார்ந்த மனிதாபிமான அரசியல் விவகாரங்களிலும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய தலைமை தலையிடாது என்ற செய்தி கேட்டு சுவிஸ் வாழ் தமிழ்பேசும் மக்களாகிய நாம் பேரதிர்ச்சியடைந்துள்ளோம்.
தமிழீழக் கலைத்துறையினர் விடுதலைப்போராட்டம் வலுவாக இருந்த காலகட்டத்தில் தமது அனைத்துப் படைப்புக்களையும் தமிழீழ விடிவுக்காகவும், மக்களின் வாழ்க்கையை முன்னிறுத்தியும் அற்பணிப்புடன் செயற்பட்டனர். அதனால் அவர்களால் உலகம் அறிந்த கலைஞர்களாக உயரமுடியவில்லை. போராட்டமே அவர்களது வாழ்வானது. மாபெரும் விருட்சமாக நீங்கள் பார்த்துவியந்த தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் பின் பல்லாயிரம் கலைஞர்களின் வீரமரணம் புதையுண்டுள்ளது. போராட்ட வளர்ச்சிக்கு மக்கள் மனங்கவர்ந்த கலைஞர்களின் பங்கெடுப்பென்பது மிகப்பெரும் பங்காற்றியது. தமிழ்த்தேசிய விடுதலை வரலாற்றில் அல்லும் பகலும் களத்தில் உழைத்த அக்கலைஞர்கள் நம்மினத்தின் நாளைய வெற்றிவரலாற்றின் சிற்பிகள்.
தமிழக அரசியல் வரலாற்றிலும் கலைஞர்களாக இருந்தவர்களே அரசியலில் கால்பதித்து நமது தொப்பிள் கொடித் தாயகமாம் தமிழகதேசத்தை முதலமைச்சர்களாக இன்றுவரை நிர்வகித்துவருகின்றனர். மக்கள் திலகம் வரை புரட்சித் தலைவி வரை அதன் நீண்ட நெடிய வரலாறு தடமிட்டுச்செல்கிறது.
அதனால் தான் வேறொரு இனத்திலும் பெரிதளவு காணப்படாத கலைத்துறைக்குள் உள்ளான அரசியற்கலப்பு நம்மினத்தில் பெரிதும் காணப்படுகிறது. மரபினால் அறப்பண்புகளோடு பிறந்த நாம் உப்பிட்டவரை உயிருள்ளவரை எண்ணக்கற்றுள்ளோம். கலைத்துறையென்பது மக்கள் எனும் கடலிற்குள் வாழும் வண்ண வண்ண மீன்கள் போன்றது. நீரை வேண்டாமென்றால் எப்படி மீன் வாழமுடியாதோ அதே போன்றுதான் தமிழ்த்தேசிய இனத்தின் அபிலாசைகளை புறக்கணித்து தமிழ்த்திரையுலகம் நீடித்துச்செல்வது கடினம்.
தமிழ்த்தேசிய மக்களின் அரசியல் பல சவால்களை சந்தித்தபோதெல்லாம் தமிழ்த்திரையுலகம் மேற்கொண்ட போராட்டங்கள் கணிசமான தாக்கங்களை உலகலாவிய ரீதியில் ஏற்படுத்தியுள்ளது. இவைகள் போராட்டம் என்பதற்கு அப்பால் கலைஞர்களை வாழவைக்கும் மக்களிற்காக அவர்கள் கட்டாயம் ஆற்றவேண்டிய சிரம்தாழ்த்தும் சேவை என்றே நாம் பார்க்கின்றோம். இன்று தமிழ்த்திரையுலகம் தமிழகத்தை விட்டு உலகலாவிய ரீதியில் மாபெரும் வர்த்தக வழர்ச்சிபெற காரணமான தமிழ்பேசும் மக்களின் நலன்களை புறந்தள்ளி, நிராகரித்து செயற்படுவதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவெடுத்துள்ளமை தமிழர் விரோத செயலாகவும், உண்ட வீட்டுக்கு வஞ்சகமிட்ட துரோகச் செயலாகவும் வர்ணிக்கப்படக்கூடியவை. பல அனுபவம்மிக்க, ஆற்றல்மிக்க, வரலாறு அறிந்த அறிவுயீவிகள் நடிகர் சங்கத்தில் இருந்தும் பொறுப்பற்ற இப்படியான அறிவிப்புகள் வெளிவருகின்றமை தமிழ்நாடும், தமிழ்தேசிய மக்களின் எதிர்காலமும் எதை நோக்கி பயணிக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.
இத் தமிழர்விரோத அறிவிப்புகள் நடிகர்கள் சார்ந்த மிகப்பெரும் ஐயப்பாட்டை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்துமென்பதிலும், இவர்களின் திரைப்படங்கள் புறக்கணிக்கப்பட வாய்ப்புக்கள் இருக்கின்றதென்பதையும் பொறுப்புள்ள தென்நிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் கருத்திற்கொள்ளவேண்டும்.
பொறுப்புள்ள தமிழ்திரையுலகம் இவ்வரலாற்றுப்பளியை எப்படி துடைக்கப்போகிறது??? இதற்காண பதிலை தமிழுலகில் வாழும் அனைத்து பொறுப்புள்ள கலைஞர்களிடமும், படைப்பாளிகளிடமும் கேட்க விரும்புகின்றோம்.
பொறுப்புடனும் உரிமையுடனும்
சுவிஸ் ஈழத்தமிழரவை

No comments:
Post a Comment