பேய்களே என்ன செய்வதென தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன தமிழ்சினிமாவைப் பார்த்து. அவ்வளவு பேய் படங்களை தொடர்ந்து உருவாக்கி வரும் தமிழ்சினிமா பேய்களே வியக்குமளவுக்கு வெரைட்டி பேய்களைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் லேட்டா ரிலீஸ் ஆனாலும் 'அட்ராசக்க' திரைக்கதையுடன் ரிலீஸ் ஆகியிருக்கிறது மாயா.
அதரவற்ற பெண் அப்சரா, ஒன்றாக படித்தவனை திருமணம் செய்து கொண்டு இருவருமாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கிறார்கள். அப்சரா கர்பமாகும் அதே சமயத்தில் இருவருக்கும் சினிமா வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணா மனமில்லாமல் குழந்தையை கலைத்துவிட கணவன் ஐடியா கொடுக்க முடியாதென அடம்பிடிக்கிறது பெண் உள்ளம். இதனால் கணவன் பிரிந்துவிட, விளம்பரங்களில் நடித்து குழந்தையையும் தன்னையும் காப்பாற்றி வருகிறாள் அப்சரா. அவளுக்கு உதவியாக இருப்பவர் தோழி ஸ்வாதி. அசிஸ்டண்ட் இயக்குனராக ஸ்வாதி வேலை செய்யும் ‘இருள்’ என்ற திகில் திரைப்படத்தின் ரிலீஸில் பிரச்சனைகள் இருக்க சுவாரஸ்யமான போட்டியை ஏற்பாடு செய்கிறது ‘இருள்’ டீம்.
‘இருள்’ படத்தை தனியாக உட்கார்ந்து, பயப்படாமல், கண்களை மூடாமல், பல்ஸ் ரேட் ஏறாமல் பார்ப்பவர்களுக்கு 5 லட்ச ரூபாய் ரொக்கம் பரிசு என்ற அறிவிப்பு வெளியாக ஒரு தயாரிப்பாளர் அந்த படத்தை பார்க்க வந்ததும் ஸ்வாதி மகிழ்ச்சியுடன் செல்கிறார். அதே சமயம் விளம்பரத்தில் நடித்த சம்பளப் பணத்தை வாங்க வந்த அப்சராவுக்கு, அந்த தயாரிப்பாளர் தான் இருள் படம் பார்க்க சென்றிருப்பவர் என்ற விவரம் தெரிய வர தியேட்டருக்கு விரையும் அப்சராவுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் இறந்துவிடுகிறார். கடன் தொல்லையை தீர்க்கவும் மகளை வளர்க்கவும் 5 லட்ச ரூபாய் உபயோகமாக இருக்குமென்பதால் விஷப்பரிட்சையில் இறங்குகிறார் அப்சரா.
படத்தின் காட்சிகள் ஓட ஓட அவரது இதயத்துடிப்பும் வேகமெடுக்கிறது. வியர்வைத் துளி கூட ஸ்லோ மோஷனில் இறங்கி அவரை சோதிக்க, வீசும் காற்றும் பயமுறுத்துகிறது. ஆள் இல்லாத தியேட்டரில் படம் பார்க்க இனி ஒரு கணம் யோசிக்க வேண்டியது வரும். தனியான காடு, ஒரு மனநல மருத்துவமனை, டெஸ்டிங்க் மருந்துகள், திடீர் மரணங்கள் என கதை வேற லெவலுக்கு மாற திடீரென படத்தில் அப்சரா வருகிறார். படத்தில் ஏற்கனவே சிலர் ஓடிக்கொண்டிருக்க அப்சராவும் ஓட்டமெடுக்கிறார். அதன்பிறகு திரைக்கதை பேய் ஓட்டம். க்ளைமாக்ஸில் காதல், தாய்ப்பாசம், ரிவெஞ்ச் என தூள் கெளப்பியிருக்கிறார்கள். இருள் திரைப்படமும் மாயா திரைப்படமும் ஒன்றாக இணையும் புள்ளி இயக்குனரின் அல்டிமேட் சிந்தனை.
(திடீர் க்ளோஸ் அப்!) கிட்டாரை போட்டு உடைப்பது, பூனையை தாவ விடுவது என இல்லாமல் ஒவ்வொரு ஃப்ரேமிலும் பேயை எங்காவது நிற்க வைத்துவிட்டு கதாபாத்திரங்களை நடக்க வைத்திருக்கிறார்கள். நீங்களாக பேயைப் பார்த்து பயந்தால் நாங்கள் பொறுப்பில்லை என்பது போன்ற எதார்த்த பேய் திரைப்படம். பாதி படத்திற்கு மேல் பயமாக இருந்தாலும் பேய் எங்கு இருக்கிறது என தேட முயன்றால் அது இயக்குனரின் வெற்றி. இரண்டு திரைக்கதைகளை ஒரே நேர்கொட்டில் முட்டி மோதாமல் கொண்டு வந்து சேர்த்திருக்கும் நேர்த்தி இயக்குனரின் எதிர்காலத்தை உறுதி செய்துவிட்டது.
ஒளிப்பதிவு செய்திருக்கும் சத்யன் சூரியனின் வேலை அமர்க்களம். காட்டில் நடத்திய படப்பிடிப்பிற்கு மட்டுமே தனி விருது கொடுக்கலாம். இசையமைத்திருக்கும் ரான் யோஹான், எடிட்டர் டி.எஸ்.சுரேஷ் என ஒவ்வொருத்தரும் படத்தின் பலம். எந்த இடத்திலும் சமரசமே இல்லாமல் பின்னி பெடலெடுக்கிறது திரைக்கதை.
நயன்தாரா தான் பேயாக வருவார் என ரசிகர்களெல்லாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்க, கடைசி வரை தேவதையைப் போல அவரை வலம்வர விட்ட இயக்குனருக்கு பாராட்டுகள். டூயட் இல்லை, ஆக்ஷன் காட்சிகள் இல்லை, வழக்கமான பேய்ப் படத்திற்கான பரபரப்பு இல்லை. மிகவும் சகஜமான கேரக்டர்களையும், பேய்களையும் திரையில் திரியவிட்டு நம்மை கதிகலங்க வைக்கிறது மாயா.
மாயா - மாடர்ன் பேய்!
No comments:
Post a Comment