இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றுள்ளது என்று கூறி வட மாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்தை ஒரு அரசு என்கிற வகையில் இனப்படுகொலை ஒன்று இலங்கையில் நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் டாக்டர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.
குறித்த தீர்மானத்தை தமது அரசு நிராகரிப்பதாகவும் இதன்போது அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பிசிசிக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் அவ்வாறு கூறினார்.
இறுதிகட்டப் போரின்போது ஏராளமானத் தமிழர்கள் பாதுகாப்புப் படையினரால் காப்பாற்றப்பட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அச்சமயத்தில் சிலர் அட்டூழியங்களைச் செய்திருந்தாலும் அவற்றை இனப்படுகொலை என்று சொல்ல முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இனப்படுகொலை என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பது வடமாகாண முதல்வரும், உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான விக்னேஸ்வரன் அவர்களுக்கு நன்றாகவேத் தெரியும் எனக் கூறும் அமைச்சர் ராஜித சேனாரட்ண, கடந்த முறை இதே தீர்மானம் மாகாண சபையில் வந்தபோது அதை ஏற்றுக்கொள்ளாத முதல்வர் இப்போது எப்படி அதை ஏற்றார் எனவும் கேள்வி எழுப்பினார்.
இறுதிகட்ட போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் சில அட்டூழியங்கள் குறித்து விசாரிக்க, சர்வதேச நடைமுறைகளுக்கு அமைய, ஏற்புடைய வகையில் உள்நாட்டிலேயே விசாரணையொன்றை இலங்கை அரசு நடத்தவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளும், பிரபாகரன் அவர்களும் பொதுமக்களை போரின்போது மனிதக் கேடையங்களாகப் பயன்படுத்தியதுதான், இறுதிகட்ட போரின்போது ஏற்பட்ட பெருமளவு உயிரழப்புகளுக்கு காரணம் என்றும் அமைச்சர் ராஜித குறிப்பிட்டார்.
போர் முடிந்த பிறகு எந்த தமிழ் அரசியல் தலைவரும் இனப்படுகொலை என்று கூறப்படுவது குறித்து தன்னுடனோ அரசுடனோ விவாதிக்கவில்லை எனக் கூறும் அமைச்சர் இனப்படுகொலை என்று கூறி இயற்றப்பட்டுள்ள வட மாகாண சபையின் தீர்மானத்தை மத்திய அரசு எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளாது என தெரிவித்தார்.