பாகிஸ்தான் - நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகளைக்கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப் போட்டியிலும் நியூஸிலாந்து அணி 119 ஓட்டங்களால் வெற்றிபெற்று, தொடரைக் கைப்பற்றிக்கொண்டது.
நெயிபியரில் இன்று பகலிரவு போட்டியாக நடைபெற்ற போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதற்கமைய 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 369 ஓட்டங்களைக் குவித்தது நியூஸிலாந்து. கேன் வில்லியம்ஸன் 112 ஓட்டங்களையும், ரோஸ் டெய்லர் - ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களையும், மார்டின் குப்தில் 76 ஓட்டங்களையும் அணிக்காக பெற்றுக்கொடுத்தனர்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் சார்பில் மொஹம்மட் இர்பான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 43.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 250 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
மொஹமட் ஹபீஸ் 86 ஓட்டங்களையும் அஹமட் ஷெஹ்ஷாட் 55 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.
நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் சார்பில் ரிம் சௌத்தீ, அடம் மில்னே, நதன் மக்கெலம், கிரான்ட் எலியோட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இப்போட்டியின் நாயகனாக நியூஸிலாந்து அணியின் கேன் வில்லியம்ஸன் தெரிவுசெய்யப்பட்டார்.
