இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளரான அரசாங்க பத்திரிகையான டெய்லி நியூஸின் ஆசிரியர் தினேஸ் வீரவன்ச மற்றும் சண்டே ஒப்சேவரின் ஆசிரியர் ஆகியோர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மஹிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வி கண்ட நிலையில் இவர்கள் இருவரும் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்சவின் தீவிர ஆதரவாளர்களான இவர்கள் இருவரும் இன்று பணிகளுக்கு வரவில்லை.
இந்தநிலையில், எதிரணியின் வெற்றி என்பது வெறுமனே மாயை என்று ராஜ்பால் தேர்தல் தினத்தன்று குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை ஐடிஎன் நிறுவன தலைவர், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தலைவர் ஹட்சன் சமரசிங்க, ஐடிஎன் உதவி பொது முகாமையாளர் சுதர்மன் ராடாலியாகொட ஆகியோரும் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை ,
ஜனாதிபதியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவிக்கையில் ,
நாட்டை விட்டு தப்பிச் சென்ற ஊடகவியலாளர்கள் மற்றும் மாற்றுச் சிந்தனையாளர்கள் மீளவும் நாடு திரும்ப முடியும் என புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அடக்குமுறைகள் காரணமாக நாட்டை விட்டு தப்பிச் சென்று வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள ஊடகவியலாளர்கள் மாற்றுச் சிந்தனையாளர்களுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இணையத்தளங்கள் முடக்கப்பட்ட மாட்டாது என ஜனாதிபதியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் கண்காணிக்கப்பட மாட்டார்கள் எனவும் தொலைபேசிகள் ஓட்டுக் கேட்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று முதல் எங்களை விமர்சனம் செய்ய உங்களுக்கு பூரண சுதந்திரம் உண்டு.
ஊடக சுதந்திரத்தை அடக்கி ஒடுக்க முயற்சிப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊடகங்கள் மீதான தணிக்கைகள் இனி வரும் காலங்களில் அமுல்படுத்தப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
