April 17, 2013

பெங்களூரு குண்டு வெடிப்புக்கு தமிழக வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளது

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில், பெங்களூருவில் கட்சித் தொண்டர்களால் நிரம்பி வழிந்த பாரதிய ஜனதா அலுவலகம் அருகே இன்று குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 8 போலீசார் உள்ளிட்ட 16 பேர் காயமடைந்தனர். நாட்டு வெடிகுண்டை பயன்படுத்தி இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் தமிழகத்தைச் சேர்ந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பெங்களூரு காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாகனத்தில் தமிழக பதிவு எண் இருந்ததால் இந்த சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து வாகனம் திருடப்பட்டு, குண்டுவெடிப்புக்காக பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

குண்டுவெடிப்பில் 13 பேர் படுகாயம்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் பெங்களூருவில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் குழுமியிருந்தனர்.

பாரதிய ஜனதா அலுவலகம் அருகே கார்கள் நிறுத்தும் பகுதியில் காலை 10.40 மணியளவில் திடீரென குண்டுவெடித்தது. இதில், 8 காவலர்கள் உள்பட 16 பேர் படுகாயமடைந்தனர். 3 கார்களும், காவல்துறை வேன் ஒன்றும், 2 இருசக்கர வாகனங்களும் பலத்த சேதமடைந்தன.

"இருசக்கர வாகனத்தில் வெடிகுண்டு"
காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த 16 பேரும் அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தினுள் மோப்பநாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் முழுமையாக சோதனையிட்டனர்.

காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பெங்களூரு காவல் ஆணையர் ராகேவந்தர் அவரத்கர், வெடித்தது மோட்டார் சைக்கிள் குண்டு என்று உறுதிப்படுத்தினார்.

தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை
தேசிய புலனாய்வு அமைப்பினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாரதிய ஜனதா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ரகசிய கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்வதன் மூலம், குண்டுவெடிப்பு குறித்த முழு விவரங்களையும், சதியாளர்களையும் கண்டுபிடிக்க முடியும் என்று புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களை கைது செய்ய மத்திய அரசு முழு உதவி செய்யும் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஆர்.பி.என்.சிங் உறுதியளித்துள்ளார்.

No comments:

Post a Comment