மைத்திரி நல்லாட்சியிலும் இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைப் பெறுபேறுகளை வெளியிடாமல் நீண்ட காலமாக இழுத்தடித்துப் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டு வருவதாகப் பாதிக்கப்பட்டவர்களால் கூறிக் கவலையும் விசனமும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளின் பரீட்சைப் பெறுபேறுகளை எட்டு மாதங்கள் கழிந்துவிட்ட நிலையிலும் இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் வெளியிடாது அசமந்தப் போக்கில் இருந்து வருவதாகவும் பரீட்சை எழுதிய பயிற்சி ஆசிரியர்கள் தமது சேவை நிரந்தரமாக்கப்படாத நிலையில் சம்பளம் அதிகரிக்கப்படாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிக் கவலை தெரிவிக்கின்றார்கள்.
சகல பரீட்சைப் பெறுபேறுகளையும் உரிய காலத்திற்குள் வெளியிடும் இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் நாடு முழுவதிலுமுள்ள அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் பயிற்சி பெற்று வந்த ஆயிரம் பேருக்கும் குறைவான எண்ணிக்கையைக் கொண்ட ஆசிரியர்களது இறுதியாண்டுப் பரீட்சைப் பெறுபேறுகளை உரிய காலப் பகுதியில் வெளியிடாமல் இழுத்தடித்துக் காலங் கடத்தி வருகின்றது. இதில் அதிகமானவர்கள் தமிழர்களாகவுள்ள மிகமிகக் குறைந்தளவு சம்பளம் பெறும் ஆசிரிய உதவியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும.

No comments:
Post a Comment