September 28, 2016

நெஞ்சார்ந்த நன்றிகள் 'எழுக தமிழ்' பேரெழுச்சி குறித்து தமிழ் மக்கள் பேரவை அறிக்கை

 
நெஞ்சார்ந்த நன்றிகள் 'எழுக தமிழ்' பேரெழுச்சி குறித்து தமிழ் மக்கள் பேரவை அறிக்கை
-----------------------------------------------------------------------------
தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகளை கண்டித்தும் தமிழர்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை அரசுக்கும் சர்வதேசத்துக்கும் எடுத்துக் காட்டும் முகமாகவும் கடந்த 24ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற “எழுக தமிழ்” மக்கள் எழுச்சி பேரணியானது தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்க ப்பட்டிருந்தது.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால் முன்னின்று ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணியில் மதகுருமார்கள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் உள் ளிட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கு கொண்டு தமது உரிமைக் கோஷங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.


இந்நிலையில் மேற்படி பேரணியில் பங்கேற்ற அனைத்து தரப்பினருக்கும் தமிழ் மக்கள் பேரவை தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 24ஆம் திகதி சனிக்கிழமை தமிழ் மக்கள் பேரவை ஏற் பாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்டு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற எழுக தமிழ் பேரணி தமிழர் வரலாற்றின் ஒரு பதிவாக அமைந்துள்ளது.

வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் முற்றத்தில், மீண்டும் ஒருமுறை, அதுவும் 2009 இன அழிப்பின் பின் மக்கள் அலைகடல் என குவிந்தது ஒரு வரலாற்றுப் பதிவு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 

மேலும் வரலாற்றுப்புகழ் மிக்க யாழ்.கோட்டைச் சூழலில் மக்கள் வெள்ளம் கூடி தமிழரின் பிரகடனத்தை உரக்கக்கூறி வெளியிட வடக்கின் முதல்வரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமாகிய சி.வி.விக்னேஸ்வரன் தமிழரின் நிலைப்பாட்டை மிகவும் கம்பீரமாகவும், தெளிவாகவும் கூறியதானது, தமிழர் நாம் எவ் வேளையிலும் எமது தியாகங்களை வீண் போகவிடப்போவதில்லை என்ற செய்தியையும், எமது உரிமைகளை விட்டுக் கொடுக்கத்தயார் இல்லை என்ற செய்தியையும் மிகவும் தெளிவாக எடுத்துக் கூறிநிற்கின்றது.

இம்மாபெரும் எழுச்சிக்கு சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது அலைகடலென திரண்டு வந்த மக்களின் உணர்வுக்கு, தமிழ் மக்கள் பேரவை சிரம் தாழ்த்தி வணங்குகின்றது.

இப் போராட்டத்தில் மிகப்பெரும் பங்காற்றிய மதகுருமார்கள் அனைவரையும் முதற்கண் வணங்கி நிற்கின்றோம்.

மேலும் இப்பேரணிக்கு தமது முழு ஆதரவையும் வழங்கியது மட்டுமின்றி பல வழிகளிலும் உதவிகள் புரிந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், யாழ்.பல்கலைக் கழக ஆசிரியர்கள் மற்றும் யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் அனைவரதும் எழுச்சிகண்டு இறும்பூ தெய்கிறோம்.

நேரடியாக பல அழுத்தங்கள் வந்த வேளையிலும், தாமாக முன் வந்து தமது வர்த்தக நிலையங்களை முற்றாக மூடி எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்ட எம தருமை வர்த்தகப் பெருமக்களின் உணர்வுமிக்கசெயல் எங்கள் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவமாகும்.

இதேபோல் தமது நாள் தொழிலை தியாகம் செய்து, தமது உணர்வுகளை வெளிக்காட்டி, பேரணியில் பங்குகொண்ட கடற்றொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஏனைய நாள் தொழில் செய்பவர்களையும் மற்றும் பலவித உத்தியோகத்தர்கள், தனிநபர்கள், மகளிர் அமைப்புக்கள், கழகங்கள், பலவிதமான பொது அமைப்புக்கள் என அனைவரதும் எழுச்சி கண்டு தமிழ் மக்கள் பேரவை பெருமை அடைகின்றது. மேலும், இப்பேரணிக்கு பல இடர்கள் மத்தியிலும் போக்குவரத்து வசதிகள் மேற்கொண்ட போக்குவரத்துச் சங் கங்கள் அனைத்தினதும் இனப்பற்றை நன்றி உணர்வோடு தமிழ் மக்கள் பேரவை நோக்குகின்றது.

ஒரு சில ஊடகங்கள் குழப்பகரமான செய்திகளை வெளியிட்டு இப் பேரணியை குழப்பும் முழு முயற்சியில் இறங்கியபோதும் மக்கள் அவ் ஊடகங்களை இனங்கண்டு அப் பொய்ப்பிரச்சாரங்களையெல்லாம் புறக்கணித்து இவ் அகிம்சைப் போராட்டத்தில் அலைகடலென திரண்டெழுந்த எழுச்சியானது ஒரு தீர்க்கமான செய்தியை சொல்லி நிற்கின்றது.

அதேவேளை இப் பேரணியின் வெற்றிக்கு அயராது உழைத்த தேசியப்பற்றுள்ள ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் நாம் என்றும் தலைவணங்கி நிற்பதுடன் அவர்களின் தேசப்பற்று எமது எதிர்கால செயற்றிட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்குமிடமில்லை என்பதையும் பதிவாக்கிக்கொள்கின்றோம்.

இதேபோல், அரசியல் சுயலாபம் கருதிய ஒரு சில சக்திகள் பேரணியை குழப்புவதற்காக பல வழிகளிலும் முயன்றபோதும், அவற்றையெல்லாம் உதாசீனம் செய்து, தமது “எழுக தமிழ்” கோஷம் வானதிர முழங்கிய எம் தமிழ் உள்ளங்களையும், அவர்களின் தேசப்பற்று மற்றும் தமிழ்பற்றையும் பார்க்கும்போது, எம் தேசத்தில் எத்தகைய இடர்கள் வரினும் இம் மண் ஒருபோதும் தியாகங்களை மறந்து அடங்கிப் போய் தமது உரிமைகளை கை விடாது என்ற செய்தியை மிகத் தெளிவாக சொல்லி நிற்கின்றது என தமிழ் மக்கள் பேரவை தனது அறிக்கையில் நன்றி பராட்டியுள்ளது.

#எழுக_தமிழ்

#தமிழ்_மக்கள்_பேரவை

No comments:

Post a Comment