அரச வீட்டுத் திட்டப் பணத்தைப் பயனாளிகளிடம் உரிய காலப் பகுதியில் உரிய தொகையை வழங்க மறுத்துள்ளதனைச் சுட்டிக் காட்டிக் கேட்ட வீட்டுத் தி;ட்டப் பயனாளிகளை அடித்துத் தாக்குதல் நடத்தியதுடன் நீ அரசாங்கத்தின் வீட்டுத் திட்டப் பணத்தைப் பெற்றுக் குடிக்கப் போகிறாயோ? குடிகாரர்களே எனவும் பாதிக்கப்பட்ட மக்களை வீட்டுத் திட்ட உத்தியோகத்தர்கள் தரக்குறைவாக ஏசியுள்ளார்கள்.
இச்சம்பவம் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ்க் காணப்படும் பரந்தன் சிவபுரம் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி சிவபுரம் கிராமத்தில் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தின் உரிய வேலைகளைப் பூர்த்தி செய்த பயனாளிகள் வீட்டுத் திட்டத்தைப் பார்வையிடும் உத்தியோகத்தர்களிடம் தாம் குறிப்பிடப்பட்ட வேலைகளைப் பூர்த்தி செய்துள்ளதாகவும் அவ்வேலைகளைப் பூர்த்தியாக்குவதற்காக வர்த்தக நிலையங்களிலிருந்து பொருட்களைக் கடனாகப் பெற்றதாகவும் அக்கடன் பணத்தைக் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளமையால் தமக்கான தவணைக் கொடுப்பனவை வழங்குமாறு கேட்கப்பட்ட போது தவணைக் கொடுப்பனவு என்று நீங்கள் கேட்க வேண்டாம் நாம் வழங்குவதைப் பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறி மிகவும் குறைந்த தொகையைப் பெற்றுக் கொள்ளுமாறு பயனாளியிடம் கூறியபோது அதற்குப் பயனாளி இத் தொகை போதாது உரிய தொகையைப் பெற்றுக் கொள்வதற்கு அனுமதியுங்கள் எனக் கூறிய போது என்ன இப்படிக் கதைக்கிறாய் பணத்தைப் பெற்று நீ என்ன சாராயம் குடிக்கப் போகிறாயா என்று கூறியதற்கு அதற்கு பயனாளி எதிர்த்துக் கதைத்த போது உத்தியோகத்தர் பயனாளி மீது அடித்துத் தாக்குதல் நடத்தியதுடன் தனது வாய்க்கு வந்தபடி ஏசியும் உள்ளதாகக் கூறப்படுகின்றது. இச்சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இது தவிர வீட்டுத் திட்ட உத்தியோகத்தர்கள் பெண்களையும் கண்டபாட்டில் ஏசியுள்ள சம்பவமும் இடம்பெற்றுள்ளது. கணவன் இல்லாத வேளை மனைவியை பேசிய உத்தியோகத்தரைச் சந்தித்து எனது மனைவியை எதற்காகப் பேசியுள்ளீர்கள் எனக் கேட்ட போது தரக்குறைவாக உத்தியோகத்தர் கதைத்தமையால் உத்தியோகத்தரும் பயனாளியும் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன
.
இதை விட உத்தியோகத்தர்கள் சிலர் மக்களை அடக்கி ஒடுக்குவது போல நாங்கள் என்ன கூறினாலும் அதை நீங்கள் அப்படியே கேட்டுக்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் மறு பேச்சுக் கூறக் கூடாது எனவும் அடாவடியாக நடந்துகொள்வதுடன் மக்களின் வீடுகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்கள் பலரை தமது வாய்க்கு வந்தபடி ஏசியும் உள்ளார்கள். இதனால் காட்டற்ராக் ஏற்பட்ட நிலையில் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுமளவுக்கும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
வீட்டுத் திட்டத்திற்குப் பொறுப்பான உத்தியோகத்தர்கள் தமது சொந்தப் பணத்தை மக்களுக்கு வழங்குவது போல விதிமுறைகளை மீறி மக்களைத் துன்பப்படுத்துவதிலும் அடாவடியாகச் செயற்படுவதிலும் ஈடுபட்டுள்ளதாகக் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது, கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் காணப்படும் பரந்தன் சிவபுரம் கிராமத்திற்கு கடந்த கால மகிந்த ராஜபக்ச ஆட்சியாளர்களாலும் அவர்களுக்கு விசுவாசமாக அப்போது செயற்பட்ட அதிகாரிகளாலும் வீட்டுத் திட்டம் உட்பட கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் எவையும் வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்டதுடன் இக்கிராமத்தில் வாழும் மக்கள் அவல வாழ்க்கையையே எதிர்நோக்கி வந்தார்கள் மகிந்தவின் அடாவடி ஆட்சி மாற்றப்பட்டதனை அடுத்து சிவபுரம் கிராமத்திற்கும் 8 இலட்சம் ரூபா பெறுமதியான அரச வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இக்கிராத்திற்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தின் முதற்கட்டக் கொடுப்பனவாக 190,000 ருபா வீட்டின் அத்திவாரம் கட்டுவதற்கான பொருட்கள் கொள்வனவு செய்வதற்கும் அத்திவாரம் கட்டுவதற்கும் மக்களிடம் வழங்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில் வெறும் 50,000 ரூபா பணத்தை மாத்திரம் மக்களிடம் வழங்கிய அதிகாரிகள் இப்பணத்திலேயே அத்திவாரம் கட்டுவதற்கான பொருட்களைக் கொள்வனவு செய்து அத்திவாரத்தைப் பூர்த்தி செய்யுமாறும் அத்திவாரம் முழுமையானதன் பின்னர்தான் மீதிப் பணத்தை வழங்குவது பற்றித் தீர்மானிப்பதாகவும் பயனாளிகளிடம் கூறப்பட்டதற்கு வெறும் 50,000 ரூபா பணத்திற்கு எப்படி அத்திவாரத்திற்கான பொருட்களைக் கொள்வனவு செய்வது? ஒரு லோட் அத்திவாரத்திற்கான பெரிய கல்லின் விலையே 24000 ரூபாய் இரண்டு லோட்டுக்கும் அதிகமாக கல் அத்திவாரத்திற்குத் தேவை இந்த 50,000 தில் கல்லை எப்படி வாங்குவது, சீமெந் எப்படி வாங்குவது மேசன் கூலி எப்படிக் கொடுப்பது எனச் சுட்டிக் காட்டி வீட்டுத் திட்ட விதிமுறைப்படி முதற்கட்டக் கொடுப்பனவான 190,000 ரூபாவையும் வழங்குமாறு கேட்டதற்கு அந்த விதி முறைகள் பற்றி எம்முடன் கதைக்க வேண்டாம் முதற்கட்டமாக நாம் 50,000 ரூபா மட்டும்தான் வழங்குவோம் அதை வைத்து அத்திவாரத்தைக் கட்டி முடியுங்கள் என அதிகாரிகளால் மக்களிடம் கண்டிப்பாகக் கூறப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் பலர் பொருட்களைக் கடனாகக் கொள்வனவு செய்து பணத்தைக் கட்ட முடியாத நிலையில் பெரும் அவலங்களை எதிர்நோக்கியுள்ளார்கள்.
அரச வீட்டுத் திட்ட விதிமுறைகளின் படி வீட்டுத் திட்டப் பயனாளிகளிடம் நான்கு தவணைகளில் பணம் வழங்கப்பட வேண்டும். ஆனால் முதல் தவணைக் கொடுப்பனவையே பிரித்து மூன்று கட்டங்களாக வழங்கி மக்களைக் கஸ்டப்டுத்துகின்றார்கள்.
ஆரச வீட்டுத்திட்ட அரச விதிமுறைகளின்படி முதலாவது தவணைக் கொடுப்பனவாக 190,000 ரூபாவும் முதற்கட்ட வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டதும் இரண்டாவது தவணைக் கொடுப்பனவாக 200,000 ரூபாவும் இரண்டாம் கட்ட வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டதும் மூன்றாம் தவணைக் கொடுப்பனவாக 200,000 ரூபாவும் மூன்றாம் கட்ட வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டதும் 194,000 ரூபாவும் வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளபோதிலும் அதிகாரிகள் மக்களைக் கஸ்டப்படுத்தும் நோக்குடன் பயனாளிகளுக்கான பணத்தை உரிய காலப் பகுதியில் உரிய முறைப்படி வழங்காமல் பல கட்டங்களாகப் பிரித்து மிகவும் குறைந்த தொகையையே வழங்கி வருகின்றார்கள்.
இதேவேளை அதிகாரிகளால் குறிப்பிடப்பட்ட தொகையைக்கூட உரிய காலப்பகுதியில் பெற்றுக்கொள்வதற்கு குறிப்பிட்ட சமுர்த்தி வங்கியில் பணம் இல்லாதமையால் அதைக்கூடக் குறிப்பிட்ட காலப் பகுதியில் மக்கள் பெற்றுக்கொள்ள முடியாத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இப்படியான சம்பவங்களை வெளியில் கூற வேண்டாம் எனவும் அப்படி வெளியில் சொல்லினால் பாதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும் என சிலர் மக்களிடம் கூறியமையால் மக்கள் இதனை வெளிப்படுத்த முடியாத நிலையிலுள்ளார்கள்.
பல பயனாளிகள் வீடு கட்டுமான வேலைகளைப் பூர்த்தியாக்கிய நிலையில் கூரை போட்டு முழுமையாக்குவதற்குக் கூட உரிய பணத்தினை வழங்க மறுத்துள்ளமையால் பல வீடுகள் கூரை போடப்படாத நிலையில் அரையும் கூறையுமாகக் காணப்படுகின்றதனை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
மற்றும் உத்தியோகத்தர்களால் குறிப்பிட்டபட்டபடி 27 அடி நீளத்தை விட 2 அடி, 3 அடி அதிகமாகக் கூட்டிக் கட்டிய வீட்டுத் திட்டப் பயனாளிகளின் வீட்டுத் திட்டத்தை ரத்துச் செய்யப் போவதாகவும் அதனைக் கூட்டிக் கட்டமாட்டோம் என்று கடிதம் எழுதி கிராம சேவையாளர், சமாதான நீதிவானிடம் உறுதிப்படுத்தி வழங்குமாறும் மக்களைக் கூறியுள்ளார்கள்.
சிவபுரத்தில் கட்டப்பட்ட வீடுகளில் முதலாவது அறை 11 அடி அகலமாகவும் இரண்டாவது அறை 10 அகலமாகவும் மூன்றாவது அறை 5 அடி அகலமாகவும் மிகவும் சிறிதாகக் காணப்படுகின்றது. மூன்றாவதாக 5 அடிக்குக் குறைவாகக் கட்டப்பட்ட அறையை 4 அடி அதிகரித்து 9 அடியாகக் கட்டுவதற்கு அனுமதிக்குமாறு மக்களால் மன்றாட்டமாகக் கேட்கப்பட்ட போதிலும் அதற்கு நாம் அனுமதிக்கமாட்டோம் எனவும் அரச வீட்டுத் திட்டத்தைக் கட்டி முழுமையாக்கித் தமக்குக் காட்டிவிட்டு பின்னர் இடித்து நீங்கள் விரும்பியபடி கட்டுங்கள் என உத்தியோகத்தர்களால் மனிதாபிமானமே இல்லாமல் கண்டிப்பாகக் கூறப்பட்டுள்ளது.
ஆனால் மேற்படி அரச வீட்டுத் திட்ட விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டபடி வீட்டின் தளப் பரப்பு ஆகக் குறைந்தது 575 சதுர அடியாக இருக்க வேண்டும் என்றே உள்ளதுடன் வீட்டின் அமைப்பினை பயனாளியின் தேவைக்கு அல்லது விருப்பத்திற்கு ஏற்றவாறு அவர்களே தீர்மானித்துக் கொள்ள முடியும் என்றே உள்ளது.
சிவபுரத்தில் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் அந்த வீட்டில் காலம் காலமாக வாழப் போகும் பயனாளிகளின் தேவைகளோ விருப்புக்களோ எவையும் கருத்திற்கொள்ளப்படாமல் அரச அதிகாரிகளின் விருப்பப்படியே அமைக்கப்பட்டுள்ளதுடன் மக்களை மக்களாக நோக்காத அடாவடிகளும் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment