அப்போலோ மருத்துவமனையின் இரண்டாம் மாடியில் உள்ள கிரிட்டிகல் கேர் யூனிட்டில் சிகிச்சை பெற்று வருகிறார் முதல்வர் ஜெயலலிதா.
தற்போது லண்டனைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் அப்போலோவுக்கு வந்துள்ளனர். தீவிர சிகிச்சை நடந்து வருகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22-ம் தேதியில் இருந்து, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டவர், அடுத்தடுத்த உடல் உபாதைகளால் சிரமத்திற்கு ஆளானார்.
இதையடுத்து, அப்போலோ மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். தற்போது குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்கின்றனர் மருத்துவமனை வட்டாரத்தில்.
நேற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், அதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்தனர்.
இதுவரையில், டாக்டர் சிவக்குமார் தலைமையில் அப்போலோ மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இன்று காலை லண்டனைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட், அப்போலோ மருத்துவமனைக்கு வந்துள்ளார். தற்போது முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
இது குறித்து நம்மிடம் பேசிய மருத்துவமனை ஊழியர் ஒருவர்,
முதல்வருக்கு நுரையீரல் தொற்று தொடர்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை குறைபாடு போன்றவை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன.
இருப்பினும், சில சிகிச்சை முறைகளுக்கு வெளிநாட்டு மருத்துவர்களின் உதவி தேவைப்பட்டது. இதற்கான, பணிகளில் சசிகலாவின் மன்னார்குடி உறவுகள் இறங்கின.
நேரடியாக சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா என பயணித்தவர்கள், மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனையைக் கேட்டுள்ளனர்.
லண்டனைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட்டின் பணிகள் குறித்து அறிந்துள்ளனர். அவரை அணுகி சென்னைக்கு வரவழைத்துள்ளனர்.
தீவிர சிகிக்சை நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் முதல்வர் நலம் பெற்றுத் திரும்புவார் என்றார்.
நுரையீரல் தொற்றின் காரணமாக, மூச்சுத் திணறல் உள்பட பலவித சிரங்களுக்கு ஆளாகியிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.
இதேவேளை, நேற்று அப்போலோ மருத்துவமனையின் செவிலியர்கள் ஒன்று திரண்டு முதல்வருக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment