அரசாங்கத்தால் ஒருபுறம் காணிகள் விடுவிக்கப்படுகின்ற போதும் மறுபுறம் காணிகள் சுவீகரிக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே, வடக்கில் படையினரால் முகாம்களை விஸ்தரிப்பு செய்வதற்கென காணிகள் சுவீகரிப்பு செய்யப்படுவதனை உடன் நிறுத்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கான அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, நல்லிணக்க அரசாங்கத்துடன் நாம் தொடர்ச்சியான பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டு வருகின்ற போதும் கடந்த ஆட்சிகாலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போதும் நடை முறைப்படுத்தப்படுவதால் இத்தகைய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இவை தொடர்பில் அண்மையில் காணி அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளோம். குறிப்பாக நல்லிணக்க அரசாங்கம் ஒருபகுதி காணிகளை விடுவி்த்து வருகின்ற போதும் மற்றொருபுறம் காணிகளை சுவீகரிக்கும் அறிவிப்பை விடுக்கின்றது. எனவே அத்தகைய செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். இவை தொடர்பில் காணி அமைச்சருடன் விரிவாக கலந்துரையாடியுள்ளோம்.
வடக்கில் காணி சுவீகரிப்பதற்கான அளவிடும் பணிகளுக்கான அறிவித்தல் கடந்த காலஅரசினால் அறிவிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி நடைபெறுவதாக சுட்டிக்காட்டிய காணி அமைச்சர் எம்மை இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுமாறு கேட்டுக்கொண்டார். இதேவேளை வடக்கு மாகாண ஆளுநரிடமும் குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இதற்கான நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
மேலும் எது எப்படியிருந்தாலும் நல்லாட்சி அரசாங்கம் எமது மக்களின் காணிகளை முழுமையாக விடுவித்து அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு தேவையானவற்றை செய்ய வேண்டும்.
கடந்த கால அரசாங்கத்தின் செயற்பாடுகள் இந்த நல்லிணக்க அரசாங்கத்தில் இல்லாவிட்டாலும் மக்களின் காணிகளை சுவீகரிக்க எடுக்கும் நடவடிக்கையை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது
எமது மக்கள் சொந்த இடத்தில் மீளக்குடியேற வேண்டும்.இதற்கான ஏற்பாடுகளே முதலில் செயற்படுத்த வேண்டும் இதுவே மக்களின் தேவையாக உள்ளது. காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இத்தகைய நடவடிக்கை தொடர்பில் ஏற்கனவே ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டாலும் அடுத்த வாரம் அளவில் ஜனாதிபதி, பிரதமருடன் இது தொடர்பில் மீண்டும் கலந்துரையாடி உறுதியான முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் மண்கும்பான் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவத்தினரது தேவைகளுக்காக சுவீகரிப்பதற்கு நில அளவை திணைக்களம் கடந்த வௌ்ளிக்கிழமை மேற்கொண்ட முயற்சி காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகளின் முற்றுகை போராட்டத்தால் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment