நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள கடத்தல் குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சிகள் இருப்பின் அவர் கைது செய்யப்படுவார் என அமைச்சர் கபீர் கசிம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தெமட்டகொட பகுதியில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபண்டர் வாகனத்தில் நபர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு தாக்குதலிற்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் இதுவரையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பில் கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பின் போது அமைச்சர் கபீர் கசிமிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்துள்ள அவர், ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமான வாகனத்தில் நபரொருவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி அல்லது பிரதமரால் பொலிஸாருக்கு எந்தவொரு அழுத்தமும் கொடுக்கப்படவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினராயினும் அமைச்சராயினும் சட்டம் யாவருக்கும் பொதுவானது. இந்த சம்பவம் தொடர்பில் அவரைக் கைதுசெய்ய பொலிஸார் வசம் சாட்சிகள் இருப்பின் அதனை செய்ய முடியும். அந்த நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனாதிபதியோ பிரதமரோ தலையிடப் போவதில்லை.
இந்த நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கு அதனை உரிய முறையில் மேற்கொள்வதற்கான சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தைப் போன்று, ஹெலிக்கொப்டர் மூலம் குற்றவாளிகளையும், சந்தேக நபர்களையும் சிங்கப்பூருக்கு அனுப்ப எம்மாலும் முடியும் ஆனால் அதனை செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment