December 02, 2015

100 வருடங்களில் இல்லாத மழை தீவாகியது சென்னை


வடதமிழகத்தில் 24 மணிநேரத்திற்கும் மேலாக பெய்துவரும் கடுமையான மழையால் சென்னை மாநகரமே ஸ்தம்பிதமடைந்துள்ளது. முற்றிலுமாக மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் தகவல் தொடர்பு , போக்குவரத்து வசதிகள் என்பன துண்டிக்கப்பட்டு   சென்னை நகரம் தனித்தீவாக மாறியுள்ளது .

சென்னையில் நேற்று இரவில் இருந்து தொடர்ந்து பெய்துவரும் பலத்தமழை காரணமாக சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதுள்ளதுடன் மின்விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இருளில் எந்தவிதமான உதவியும் கிடைக்காமல் பொதுமக்கள் கடுமையான துன்பங்களைச் சந்தித்து வருகின்றனர்.

போரூர்- வடபழநி சாலையில் 2 அடிக்கு மேல் வெள்ளநீர் தேங்கியுள்ளது. நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், அமைந்தகரை சாலைகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. கிண்டி –  வேளச்சேரி பகுதியில் கடுமையான மழைகாரணமாக சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலையும் வெள்ளம் காரணமாக முடங்கியுள்ளது. தற்போது சென்னை வருவதற்கு பெங்களூர் சாலை மட்டுமே ஓரளவுக்கு பயன்படுத்தப்படுகிறது. எனினும் அந்த சாலையிலும் வெள்ளநீர் உயர்ந்து வருவதனால் போக்குவரத்து நெரிசல் காணப்படுகின்றது.

சென்னையில் பெய்து வரும் கடுமையான தொடர் மழையால் சென்னை விமான நிலைய ஓடுதளத்தில் மழைவெள்ளம் சூழ்ந்துள்ளதால் விமானப் போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையுடன் அந்தமான் தீவுகளுக்கு அருகேயும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அந்த காற்றழுத்த தாழ்வு நிலை மெதுவாக நகர்ந்து கொண்டிருப்பதால் கடும்மழை விட்டு விட்டு பெய்கிறது.

மேலும் காற்றழுத்தம் சென்னையை நெருங்கும்போது மிக கடுமையான மழை பெய்து வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


No comments:

Post a Comment