சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்படுபவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு பிரித்தானிய தமிழர் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில்,
இலங்கையின் சிறைகளில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறைக் கைதிகள் அனைவரும் காலதாமதமின்றி விடுதலை செய்யப்படுவதுடன் அவர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவையினராகிய நாம் இலங்கை அரசிடமும், சர்வதேச நாடுகள் முன்பும் எமது கோரிக்கையினை முன்வைக்கின்றோம்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளின் ஓர் வடிவமாக சட்டத்துக்கு முரணான கைதுகளும், காணமல் போகச் செய்யப்படுதலும் ஆட்சிக்கு வரும் இரு சிங்கள பேரினவாத அரசுகளாலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவ்வாறு சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை விடுதலை செய்யக்கோரி பிரித்தானிய தமிழர் பேரவையினர் தமது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக இலங்கை அரசு மீது அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
அதே சமயம் தமது விடுதலையைக் கோரி சிறைக்கைதிகள் கடந்த மாதம் உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர்.
எனினும் அரசினால் வழங்கப்பட்ட உறுதி மொழியினைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டிருந்த நிலையில், அவர்கள் விடுதலை தொடர்பில் இலங்கை அரசினால் எதுவிதமான காத்திரமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமை தமிழர்கள் மத்தியிலும் சிறைக்கைதிகள் மத்தியிலும் பெரும் விசனத்தை ஏற்ப்படுத்தியிருந்தது.
தமிழர்கள் விடயத்தில் உறுதி மொழிகளை வழங்குவதும் பின்பு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் கால தாமதத்தை ஏற்ப்படுத்துவது போன்றும் கைதிகள் விடயத்திலும் மேற்கொள்ளப்படும் இவ்வாறான இலங்கை அரசின் நடவடிக்கைகளை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் இலங்கையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள அறவழிப் போராட்டத்திற்கு எமது முழு ஆதரவினையும் வழங்கி நிற்கின்றோம்.
சர்வதேச சட்டதிட்டங்களுக்கு முரணாக இலங்கை அரசினால் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடவடிக்கைகளினை சர்வதேச நாடுகள் கண்டனம் செய்வதுடன் தமிழ் கைதிகளின் விடுதலையையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் சர்வதேச நாடுகளிடம் எமது கோரிக்கையினை முன்வைக்கின்றோம்.
மேலும் பிரித்தானியாவில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊடக சிறைக்கைதிகளின் விடுதலை தொடர்பில் மேற்கொள்ளப்படும் எமது நடவடிக்கைகளுக்கு பிரித்தானிய வாழ் தமிழர்களின் தொடர்ச்சியான ஆதரவினையும் வேண்டி எமக்கு முழு ஒத்துழைப்பினையும் வழங்குமாறு வேண்டி நிற்கின்றோம்.

No comments:
Post a Comment