November 25, 2015

நோயாளி குணமடையும் வேகத்தை இரத்த மாதிரி மூலம் அறியலாம்: ஆய்வு முடிவு

இரத்தத்தின் வெள்ளை அணுக்களைக் கொண்டு அறுவை சிகிச்சைக்கு பின்னர் நோயாளி பழைய நிலையை அடையும் காலத்தைக் கணக்கிட முடியும் என சமீபத்திய ஆய்வு மூலமாக தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஆராய்ச்சியில் அறுவை சிகிச்சைக்கு முன்னர் நோயாளியிடமிருந்து இரத்த மாதிரி பெறப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு தயாராகும் நோயாளிகளின் உடலிலிருந்து சேகரிக்கப்பட்ட இரத்த மாதிரியில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் அளவீட்டைக்கொண்டு குணமாகும் விகிதத்தைத் தெரிந்துகொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆபத்தில்லாத இடுப்பு அறுவை சிகிச்சை செய்யவிருந்த சுமார் இருபத்தைந்து நோயாளிகளிடம் சேகரிக்கப்பட்ட இந்த இரத்த மாதிரியில் உள்ள வெள்ளை அணுக்களின் விகிதம் மூலமாக நோயாளிகள் பூரணமாக குணமடைய எடுத்துக்கொள்ளும் கால அவகாசத்தை தெரிந்துகொள்ள உதவும் என கருதப்படுகின்றது.

சிறிய அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்முடிவு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு எப்போது சிகிச்சையளிக்க ஆரம்பிக்கலாம் என்பதை கணக்கிட ஏதுவாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வை மேற்கொண்டு, சுமார் 80 நோயாளிகளிடம் நடத்த உள்ளதாக ஆய்வுக் குழு குறிப்பிட்டுள்ளது.


No comments:

Post a Comment