தமிழ் அரசியல் கைதிகளுடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த நேரிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அண்மைய நாட்களாக அரச தரப்பில் இருந்து பல்வேறான கருத்துக்கள் வெளிப்பட்டு வருகின்றது.
அதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அரசாங்கத்தின் உயர் தலைவர்கள் உறுதி அளித்துள்ளமை போன்று எதிர்வரும் 7 ஆம் திகதிக்குள் கைதிகள் விடுதலை தொடர்பில் சாதகமான முடிவுகளை எட்டுவதற்கான சமிக்கைகளும் அவதானிக்கப்படவில்லை.
இதுதொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில்,
கூட்டமைப்பு தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான திரு. சம்மந்தன் வழங்கிய உறுதிமொழியை அடுத்தே அரசியல் கைதிகள் தங்களது சாகும் வரையிலான உண்ணாவிரத்தினை இடைநிறுத்தி வைத்துள்ளனர். குறித்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் தற்போது அவர்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில், சரியான தீர்வு பெற்றுக் கொடுக்கப்படாத பட்சத்தில், குறித்த தமிழ் அரசியல் கைதிகளுடன் இணைந்து தாமும் போராட்டத்தில் குதிக்க நேரிடும் எனவும் அவர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் இந்த அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment