"எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் தெரிவு" இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா..???
வல்லரசுகள் எப்போதும் தங்கள் தேசநலனையே முன்னிறுத்தி காய்களை நகர்த்தும் என்பது வரலாறு. தங்கள் மேலாதிக்கத்திற்காக எவ்வளவு உயிரையும் பலி கொடுக்க தயங்காதவர்கள். பல ஆயிரம் உயிர்களை காவு வாங்கி, அவர்களின் பிணங்களின் மேல்தான் தங்கள் தேசத்தை கட்டியுள்ளார்கள். அவர்களைத்தான் நாங்கள் தேவதூதர்களாக எண்ணி அவர்களிடம் நீதி கேட்டு நிற்கும் அவலத்தில் ஈழத்தமிழினம் இன்று உள்ளது.!
எப்போதும் வல்லரசுகள், கேந்திர முக்கியத்துவம் உள்ள நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்களை ஆட்டுவிக்கும் நூல் தங்களில் கைகளில் இருக்கவேண்டும் என்பதே அவர்களின் எழுதப்படாத விதி. இதில் தங்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள நாட்டுத் தலைவர்களை பெரும் பணத்தாலோ, அல்லது அவர்களது தனிப்பட்ட பலகீனத்தின் ஊடாகவோ, அல்லது அமைச்சர்களை விலை பேசியோ, அன்றைய நிகழ்காலத்திற்கு ஏற்றால் போல அழுத்தம் கொடுத்தோ, தங்கள் வழிக்கு கொண்டு வருவது, அல்லது இதன் மூலம் ஆட்சியை மாற்றுவது.
முதலாவது வழியைத்தான் மகிந்தாவிற்கு பின்பற்றப்பட்டது. முதலாவது வழிமுறை சாத்தியமற்று போகும் போதுதான் இரண்டாவது வழிமுறையை கையில் எடுப்பார்கள், அதற்கு சமீபத்திய உதாரணங்கள் கடாபி, சதாம்குசைன் போன்றவர்கள். மகிந்தாவை அகற்றிய காரணம், சீனா, இரசியா, ஈரான், வடகொரியா இப்படி உலக வல்லரசுகளுக்கு எதிரான இரண்டாம் அணியினருடன் கூட்டை ஏற்படுத்தியது, மேலைத்தேய வல்லரசுகளுக்கு சினத்தை உண்டாக்கியது.
அதனூடே மகிந்தாவை அகற்றும் முடிவை சர்வதேசம் எடுத்த முதல் நகர்வுதான் இலங்கை அரசுக்கு எதிராக போர்குற்றம், மனிதஉரிமை மீறல் இப்படிப் பல கதை விடப்பட்டது. இப்போது அவை எல்லாம் தண்ணீரில் எழுதப்பட்டகதையாக மாறியதை அவதானிக்கவும். இந்த ஆட்சி மாற்றும் முடிவை எடுத்ததும் ஐ.நா ஊடாக மகிந்த அரசுக்கு அழுத்தம் கொடுப்பதன் ஊடாக தமிழர் சார்பானவர்கள் போல காட்டப்பட்டது. அதையும் தமிழர் நம்பினர்.!
அப்போது தமிழினம் தங்களுக்காக வல்லரசுகள் இருப்பதாக எண்ணி ஆனந்தக்கண்ணீர் வடித்த நேரம், மறு வளத்தால், மகிந்தவின் பரம எதிரியான சந்திரிக்கா ஊடாக ராஜதந்திர நகவுகளை மேற்கொண்டனர். பெரும் பணம் கைமாறி அமைச்சர்கள் விலைக்கு வாங்கப்பட்டு ஆட்சி மாற்றமும் கொண்டு வந்தாகிற்று. மேலைத்தேய வல்லரசுகளின் செல்லப்பிள்ளையான ரணிலும், தத்துப்பிள்ளையான ஸ்ரீசேனாவையும் ஆட்சியில் அமர்த்தியபின் நிம்மதி பெருமூச்சை சர்வதேசம் விட்டுள்ளது.
இப்போது தமிழருக்கு திறந்திருந்த ஒரு யன்னலும் மூடப்பட்டு விட்டது. தமிழருக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் என்னும் நம்பிக்கையில் காலம் கடத்திய தமிழினம் வாயில் விரலை வைத்து சப்பும் நிலைக்கு சர்வதேசம் கொண்டு வந்து விட்டுள்ளது. இப்போது தமிழ் அரசியல் தலைவர்கள், இவர்களே அறியாமல் சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள்தான் இருக்கின்றார்கள்.
அதன் ஒரு வெளிப்பாடே "எதிர்க்கட்சி தலைவர் பதவி". இதன் மூலம் எதை சாதிக்க விளைகின்றார்கள்? சிங்கள அரசு திருந்தி விட்டது, தமிழ் தலைவர்களும் அவர்களுடன் ஒற்றுமையாக உள்ளது போல ஒரு தோற்றப்பாட்டையும் உருவாக்கியாகிவிட்டது. இதன் மூலம் தமிழரின் வாயை அடைத்து சிங்களத்துக்கு எதிரான போர் குற்றங்களை தமிழர்களை மறக்க செய்ய முயற்சிக்கின்றனர்.
ஆக எப்போதும் போல தமிழினம் கனவுலகில் இருக்க வேண்டியது தான்.
சிங்களமும், சர்வதேசமும் தந்த தமிழருக்கான தீர்வு "எதிர்க்கட்சி தலைவர் பதவி" மட்டும்தான்.!!!
ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல முடியும் தமிழருக்கென்று யாரும் உதவப் போவதில்லை. தமிழனின் பலவீனமே அன்பாய் பேசுவோரை நம்புவதே. தமிழர் விழிப்புடன் இருக்கவேண்டிய காலமிது. தூரநோக்குடன் கூடிய காய் நகர்த்தலை, தமிழினம் இப்போதே செய்யாவிட்டால். தமிழினம், ஏடுகளில் இருந்ததற்கான அடையாளம் மட்டுமே கடைசியில் மிஞ்சும்.!!
"தன் கையே தனக்கு உதவி" நாங்கள் பலமான சக்தியாக இருக்கும் போதுதான் எங்களைத் தேடி வருவார்கள்/வந்தார்கள். இந்தக் கூற்றைத்தான் தேசியத் தலைவர் அவர்கள் கடைசி வரை நம்பினார்.
நாம் இப்போது பலமில்லாத நிலையில் இருக்கும் போதுதான் தேசியத் தலைவர் அவர்களின் தீர்க்க தரிசனத்தை உணரமுடிகின்றது.!
- ஈழத்து துரோணர்.
No comments:
Post a Comment