போர் நடந்துவரும் ஏமனின் தென்கிழக்கே உள்ள முக்கிய சிறையை அல்- காய்தா இயக்கத்தினர் திட்டமிட்டு தகர்த்து அங்கிருந்த அதன் முக்கிய தீவிரவாதத் தலைவர் உட்பட சுமார் 300 கைதிகளை தப்பிக்கச் செய்துள்ளனர்.
ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அரசை முடக்கி சண்டையிட்டு வருவதால் அவர்களுக்கு எதிராக சவுதி அரேபியப் படை போர் நடத்தி வருகிறது. இதனால் அங்கு அபாயகரமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், ஏமனின் ஹட்ரமவுத் மாகாணத்தில் உள்ள சிறையை அல்-காய்தா இன்று தாக்கினர். சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாக அடைக்கப்பட்டிருந்த, அல் - காய்தா இயக்கத்தின் முக்கியத் தலைவர் கலீத் பத்ராஃபி உட்பட 300 கைதிகளை சிறையிலிருந்து தப்பிக்கச் செய்ததாக ஏ.எப்.பி. செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் சிறைத் துறை அதிகாரிகள் 2 பேரும் 5 கைதிகளும் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறையிலிருந்து தப்பித்திருக்கும் கலீத் பத்ராஃபி, அரேபிய தீபகற்பத்தில் அல்-காய்தாவின் முக்கியத் தலைவர் ஆவார். கடந்த 2011-2012 வரை நடந்த ஏமன் உள்நாட்டு பிரச்சினையில் அரசை எதிர்த்து பெரும் பகுதியை இவர் தலைமையிலான அல்-காய்தா ஆதிக்கத்துக்கு கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.
அல் - காய்தா இயக்கத்தின் வேராகக் கருதப்படும் ஏமனில் தற்போது மோசமான சூழல் நிலவும் நிலையில், இந்த சிறை தகர்ப்பு செயல், நிலைமையை இன்னும் மோசமடைய செய்யும் என்று ஏமன் அரசியல் நோக்கர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
