March 01, 2015

ஐ.நா. மனித உரிமை பேரவையின் 28 வது கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்!

நாளை ஜெனீவாவில் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 28 வது கூட்டத்தொடரின்  ஆரம்ப அமர்வில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றவுள்ளார். 

மங்கள சமரவீரவின்  இந்த உரை ஜெனீவா நேரடிப்படி நாளை பிற்பகல் 1.20 மணிக்கு இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை அமர்விற்கு மேலதிகமாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவாரெனவும் அமைச்சின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பிலான அறிக்கையை செப்டெம்பர் மாத அமர்வில் சமர்ப்பிக்க வேண்டுமென இலங்கை அரசாங்கம் முன்வைத்த கோரிக்கை ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தையடுத்து ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலிலிருந்து இலங்கை தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கவென ஒதுக்கப்பட்ட நிகழ்ச்சிகள் நீக்கப்பட்டுள்ளன. 

இந் நிலையில் ஆரம்ப அமர்வில் இலங்கை சார்பில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆற்றவுள்ள உரை உலக முழுவதுமுள்ள தமிழர்களின் பாரிய எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. மங்கள சமரவீர தனது உரையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் இலங்கை குறித்த அறிக்கையை பிற்போட்டமைக்காக நன்றி தெரிவிப்பதுடன் உள்ளக பொறிமுறையை விரைவில் நிறுவுவதாகவும் உறுதி வழங்குவாரென அமைச்சின் உயர்மட்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் மங்கள சமரவீர அங்கிருந்து நேரடியாக ஜெனீவாவுக்கு பயணமாகியுள்ளார். இவர் தலைமையில் இலங்கையின் உயர் மட்ட அதிகாரிகள் குழுவொன்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28 வது கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் உயர் மட்ட கூட்டத் தொடரில் பங்குபற்றும் அமைச்சர் சமரவீர, இதில் கலந்து கொள்வதற்காக ஜெனீவா வருகை தந்திருக்கும் ஏனைய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களையும் சந்தித்து இலங்கையின் புதிய அரசாங்கம் நால்லாட்சி மற்றும் நூறு நாள் வேலைத்திட்டம் குறித்து விளக்கமளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 6 ஆம் திகதி அமைச்சர் மங்கள சமரவீர நாடு திரும்பவுள்ளார்.

கடந்த மாதம் நடுப்பகுதியில் வொஷிங்டனுக்கு விஜயம் செய்திருந்த மங்கள சமரவீர அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியை சந்தித்து பேச்சு நடத்திய அதேநேரம் இலங்கை குறித்து ஜெனீவா அறிக்கையை அடுத்த அமர்விற்கு ஒத்திவைக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை யின் 28வது கூட்டத் தொடர் மார்ச் 27 ஆம் திகதி வரையில் நடைபெறும். உயர்மட்ட அமர்வில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி, ஐக்கிய நாடுகள் செய லாளர் நாயகம் பான்கீமூன், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணை யாளர் செய்ட் அல் ஹுசேன், ஐ.நா. பொதுச் சபைத் தலைவர் சேம் குடேசா, மனித உரிமை பேரவையின் தலைவர் ஜோசிம்ருகர் ஆகியோரும் உரையாற்றவுள்ளனர்.