March 31, 2015

புலம்பெயர் அமைப்புக்கள் தடை குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை-அஜித் பெரேரா


புலம்பெயர் அமைப்புக்களை தடை செய்வது குறித்து இன்னமும் இறுதித் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்தப் பிரச்சினை மிகவும் உணர்வு பூர்வமானது எனவும், மிகவும் நிதமான முறையில் இந்தப் பிரச்சினையை அணுக வேண்டுமெனவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் பெரும் எண்ணிக்கையிலான புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களை தடை செய்யப்பட்ட பட்டியலில் அறிவித்திருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக குற்றம் சுமத்தியே இவர்கள் தடை செய்யப்பட்டிருந்தனர். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் பிரகடனம் ஒன்றின் அடிப்படையில் 16 நிறுவனங்களும், 424 தனிப்பட்ட நபர்களும் தடை செய்யப்பட்ட பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.

புலிகளுடன் தொடர்புகளைப் பேணியமைக்கான உறுதியான ஆதாரங்கள் இல்லாத அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களை இந்தப் பட்டியலிலிருந்து நீக்குவது குறித்து கவனம் செலுத்தப்படும் என புதிய அரசாங்கம் அறிவித்திருந்தது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றில் இது குறித்து அறிவித்திருந்தார்.