இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அறிக்கை திட்டமிட்டவாறு எதிர்வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட்டது.
இந்த விசாரணை அறிக்கை எதிர்வரும் மார்ச் மாத அமர்வுகளில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த அறிக்கை சமர்ப்பிப்பு குறித்து ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
ஏற்கனவே திட்டமிட்டவாறு விசாரணை அறிக்கை இம்முறை அமர்வுகளில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசாரணைக் குழுவினரிடம் வலியுறுத்தியுள்ளது.
புலம்பெயர் தமிழர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அமெரிக்கா போன்ற பல்வேறு தரப்பினரிடம் கடுமையான பிரயத்தனத்தின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றி விசாரணை நடத்தப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்திற்கு கால அவகாசத்தை வழங்க ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவ்வாறு கால அவகாசம் வழங்கப்பட வேண்டியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அறிக்கை சமர்ப்பிக்கப்படாது காலம் தாமதிக்கப்பட்டால் எதுவும் நடக்காது என்பதே அர்த்தம் எனவும் அவ்வாறான ஓர் சூழ்நிலைக்கு இடமளிக்கப்பட முடியாது எனவும் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.