இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்துக்கு பின்னர் அங்குசெல்கின்ற மூத்த அமெரிக்க உயரதிகாரியாக அந்நாட்டின் உதவி வெளியுறவுச் செயலாளர் நிஷா பிஸ்வால் தற்போது கொழும்பில் உள்ளார்.
மூன்றுநாள் விஜயமாக இலங்கை சென்றுள்ள நிஷா பிஸ்வால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினரை சந்தித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை, முன்னதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர குழுவினரை சந்தித்து பேச்சுநடத்திய நிஷா பிஸ்வால், பின்னர் கூட்டாக ஊடகவியலாளர் சந்திப்பிலும் கலந்துகொண்டார். 'இலங்கை தொடர்பில் இன்று உலகம் பேசிக்கொண்டிருக்கும் இந்த உற்சாகத்தையும் இங்குள்ள ஜனநாயகத்தையும் நேரடியாக இங்குவந்து பார்க்கக்கிடைத்ததை இட்டு நான் உண்மையில் மகிழ்ச்சியடைகின்றேன்' என்றார் நிஷா பிஸ்வால்.
இலங்கையின் புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பிலும் நிஷா பிஸ்வால் பாராட்டுக்களை தெரிவித்தார். 'அதிபர் சிறிசேனவும் பிரதமர் விக்ரமசிங்கவும் தங்களின் முதல் 100 நாட்களுக்காக தங்களின் குறிக்கோள்கள் அடங்கிய நிகழ்ச்சி நிரலை முன்வைத்திருக்கிறார்கள். இந்த நோக்கங்களில் பல, மிகவும் குறுகிய காலத்துக்குள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன' என்றார் பிஸ்வால்.
இங்கு இன்னும் மிகவும் சிரமப்பட வேண்டிய வேலைத்திட்டங்களும் கடுமையான சவால்களும் எதிர்காலத்தில் இருக்கின்றன என்பதை நாங்கள் உணர்ந்துகொள்கின்றோம். இதில் முன்னேற்றம் காண்பதற்காக அமெரிக்காவை இலங்கை பங்காளியாகவும் நட்பு நாடாகவும் கருதமுடியும்' என்றும் கூறினார் நிஷா பிஸ்வால்.
பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும், ஊழல்களைத் தடுத்து நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கும், மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் அமெரிக்கா இலங்கைக்கு துணைநிற்கும் என்றும் அமெரிக்காவின் உதவி வெளியுறவுச் செயலாளர் கூறினார்.
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் பல தலைமுறைகள் பழமையானது என்று கூறிய நிஷா பிஸ்வால், சுதந்திர காலம் தொட்டு இலங்கைக்கு இரண்டு பில்லியன் டொலர்களுக்கும் அதிக நிதியுதவி அளித்துள்ளதாகவும் ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டார். உலகில் இலங்கையின் உற்பத்திப் பொருட்களை அதிகளவில் வாங்கும் நாடு அமெரிக்கா தான் என்றும் இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகமும் முதலீட்டு உறவுகளும் மேலும் பலமடையும் என்றும் அமெரிக்க உதவி வெளியுறவுச் செயலாளர் கூறினார்.
