வெளிநாட்டுப் பிரஜைகளின் வடக்கு பயணங்கள் தொடர்பிலான தடைகள் நீக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு கடவுச் சீட்டுடையவர்கள் வடக்கிற்கு பயணம் செய்யும் போது அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டுமென கடந்த அரசாங்கம் கட்டுப்பாடு விதித்திருந்தது.
பாதுகாப்பு அமைச்சிடம் இந்த அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்தது.
நாட்டில் நிலவி வரும் அமைதியான சூழ்நிலை காரணமாக இவ்வாறு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படக் கூடிய அவசியம் கிடையாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுக்கொண்டு வெளிநாட்டுக் கடவுச்சீட்டுடையவர்கள் வடக்கு பயணம் செய்ய வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கிற்கு பொருட்கள் எடுத்துச் செல்வது தொடர்பில் நிலவி வந்த கட்டுப்பாடுகளையும் புதிய அரசாங்கம் தளர்த்தியுள்ளது.
வெடிபொருட்கள், இராணுவச் சீருடைக்கு நிகரான உடுதுணிகள், ஆயுதங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களும் நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்றே வடக்கிற்கும் எடுத்துச் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
