திருகோணமலை நகரில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த உதவித் தேர்தல் ஆணையர் உட்பட தேர்தல் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று இரவு நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக உதவி தேர்தல் ஆணையரால் போலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை நகருக்கு வௌியே ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரொருவரின் பிரச்சார அலுவலகமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய நபர்கள் தேர்தல் அதிகாரிகளின் கைத் தொலைபேசிகளையும் பறித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக இரு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணிகளின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தமது ஆதரவாளர்கள் இலக்கு வைத்து தாக்கப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 48 மணி நேரத்திற்குள் ஆரையம்பதி மற்றும் அரசடித்தீவு ஆகிய இடங்களில் இடம்பெற்ற இரு வெவ்வேறான சம்பவங்களில் இருவர் தாக்குதலுக்குள்ளாகி அரச மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவிக்கின்றார்.
மாவட்டத்திலுள்ள ஆளும் தரப்பு அரசியல்வாதிகளின் பின்னனியிலே இந்த தாக்குதல் நடைபெறுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றச்சாட்டுக்களை முன் வைத்தாலும் ஆளும் தரப்பு அதனை மறுக்கின்றது.
இதேவேளை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினரான ரஹ்மத் மன்சூரின் வீட்டின் மீது நேற்றிரவு தொடர்ச்சியான கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கல்முனை போலிசில் தான் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
இந்தத் தாக்குதலின் போது வீட்டுக் கூரைக்கும் ஜன்னல்களுக்கும் சேதமேற்பட்டுள்ளதாக கூறும் அவர் ஆளும் தரப்பு நகர சபை உறுப்பினரொருவர் மீதும் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.