ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தனது பதவியேற்பு நிகழ்வில் ஆற்றிய ஏற்புரையின் போது நமது பெயர்களை குறிப்பிட மறந்தமையையிட்டு நாடு முழுக்கவும், புலம் பெயர்ந்தும் வாழும் நமது மக்கள் மத்தியில் ஒரு மனக்கிளர்ச்சி ஏற்பட்டுள்ளமையை நான் அறிவேன். பொது எதிரணியில் ஆரம்பம் முதலே அங்கம் வகித்த நமது கட்சியையும், அதேபோல் மலையக கட்சிகளான மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியவற்றையும் பெயர் குறிப்பிட ஜனாதிபதி மறந்தது தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு இருப்பது நியாயமானது ஆகும். உண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் வியூகம் அமைத்து சிங்கள மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளை ஒன்று திரட்டிய வண. சோபித தேரரின் பெயரையும் கூட ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட மறந்து விட்டார். இது பற்றி நிகழ்ச்சி நடந்து முடிந்த பின்னர் ஜனாதிபதி அவர்கள் என்னிடம் உரையாடியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் நான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுடனும் உரையாடியுள்ளேன். ஜனாதிபதி அவர்கள் 10ம் திகதியே பதவியேற்பதாக இருந்தது. பின்னர் அது அவசர அவசரமாக மாற்றப்பட்டது.
ஜனாதிபதியின் உரையும் முன்கூட்டியே தயாரிக்கப்படவில்லை. எனவே இது தற்செயலாக நிகழ்ந்த நிகழ்வு. நாங்கள் மிகுந்த அரசியல் முதிர்சியுடனும், பெருந்தன்மையுடனும் நடந்துகொள்ள வேண்டிய வேளை இது என்பதால், இதனை பெரிது படுத்த வேண்டாம் என நான் தமிழ் மக்களை கேட்டுக்கொள்கிறேன். என்று மனோகணேசன் அவர்கள் தெரிவித்தார்
No comments:
Post a Comment