தேசப் பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொது செயலாளர் வசந்த பண்டார இன்று பிற்பகல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அண்மையில் ஸ்ரீகொத்த கட்சி தலைமையகத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகன இந்த தகவலை வெளியிட்டார்.
இதேவேளை, இன்று கைது செய்யப்பட்ட பியகம பிரதேச சபையின் தலைவர் துலிப் விஜயசேகர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
ஜனாதிபதி தேர்தல் பிரசார காலப்பகுதியினில், தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்பு பட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை, அனுராதபுர பிரதேசத்தில், 17 வயதான யுவதி ஒருவரையும் 46 வயதான பெண் ஒருவரையும் பாரஊர்தியினால் மோதி உயிரிழக்க செய்தும், மேலும் 6 பேரை காயப்படுத்திய இராணுவ லான்ஸ் கோப்ரல் மற்றும் தண்ணீர் தாங்கி பாரஊர்தியின் சாரதி ஒருவரும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அனுராதபுர மேலதிக நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.
இராணுவத்தின் இரண்டாவது படையணியைச் சேர்ந்த அனுராதபுர திசாவௌ இராணுவ முகாமில் பணியாற்றிய 30 வயதான லான்ஸ் கோப்பிரலுமே கைது செய்யப்பட்டார்கள்.
கடந்த நொவம்பர் 16ஆம் திகதி குறித்த லான்ஸ் கோப்ரல் மது அருந்திய நிலையில், பாரஊர்தியை செலுத்தியதன் காரணமாக ஆசிரியை ஒருவரும் பிறிதொரு மாணவியுமே உயிரிழந்தார்கள்.
அனுராதபுரம் பிரதான அஞ்சல் அலுவகத்திற்கு முன்னால் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில், மேலும் ஆறு பேர் காயமடைந்தனர்.
