December 17, 2014

சிறிலங்காவின் பொய்ப்பிரச்சாரங்களுக்கு பதில்கூறிக் கொண்டிருக்க முடியாது !

அனைத்துலக விசாரணையின் முடிவுகள், பொதுசன வாக்கெடுப்புக்கான சூழலை ஏற்படுத்துதல் என, தமிழின அழிப்புக்கு பரிகாரநீதியினைப் பெறுவதற்கான நிகழ்ச்சி நிரலிலை வகுத்து நாம் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், சிறிலங்கா அரசின் தேர்தல் மேடை முழக்கங்களுக்கு நாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.
மைத்திரி, சந்திரிகா, ரணில் கூட்டணியினர் சிங்கப்பூர் சென்றிருந்த வேளை, நாடுகடந்த தமிழிழ அரசின் பிரதிநிதிகளுடன் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர் என்ற சிறிலங்காவின் ஆளும் அரசின் அமைச்சர்கள் நிமால் சிறிபால டி சில்வா, கெஹலிய ரம்புக்வெல்ல, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் கூட்டாக கொழும்பில் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்காவின் அரசின் அமைச்சர்களின் இக்கருத்துக்கு பதில் அளிக்கும் பொழுதே, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ் மேற்கூறிய கூற்றினைத் தெரிவித்திருந்ததோடு, தேர்தல் நாள் நெருங்கநெருங்க இவ்வாறான விடயங்கள் இன்னும் அதிகரிக்கும் என்பதனை நாம் எதிர்பார்க்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
புலம்பெயர் தமிழர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை அமைத்து, இலங்கையில் தமிழீழம் அமைக்கப் போராடுகின்றனர் என சிங்கள மக்களுக்கு பயங்காட்டி வாக்குச் சேகரிக்கும் சிங்கள அரசியல் தரப்பினரது கருத்துக்கள், தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளுடன் பிரித்தானியாவில் சிங்கப்பூரில் சந்திப்புக்களை எதிரணியினர் நடத்தினர் என்ற பொய்ப்பிரச்சாரங்கள் ஆகியன , நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீதான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அச்சத்தினை வெளிப்படுத்துகின்றது.
தமிழீழத் தாயகத்தில் உருவாக்கப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை பெரும் இனஅழிப்பொன்றின் ஊடாக 2009ல் அழித்துவிட்டதாக சிங்களப் பேரினவாதம் மார்தட்டிய வேளை, தோற்றம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிங்களதேசத்துக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது என்பதனை இது வெளிக்காட்டுகின்றது.
ஈழத்தமிழினத்தின் மீது இனப்படுகொலையினைத் தலைமை தாங்கி யவர்கள் என்ற வகையில், சிறிலங்கா அரசின் தற்போதைய தலைவர் மகிந்த ராஐபக்ச, முன்னாள் அரசுத்தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்கா மற்றும் இராணுவத்தளபதி சரத் பெண்சேகா உட்பட பன்னிருவர்கள் பெயர்களை பட்டியலிட்டு, இனப்படுகொலையாளிகளாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சில மாதங்களுக்கு அறிவித்திருந்தும் உள்ளது.
அனைத்துலக விசாரணையின் முடிவுகளை எவ்வாறு சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் கையாள்வது, பொதுசன வாக்கெடுப்புக்கான சூழலை ஏற்படுத்துவது என தமிழின அழிப்புக்கு பரிகாரநீதியினைப் பெறுவதற்கான எமக்கான நிகழ்ச்சி நிரலிலை வகுத்து நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இந்நிலையில் சிறிலங்கா அரசின் தேர்தல் மேடை முழக்கங்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டுகின்றோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.