இந்தியா முழுவதும் மோடி அலை வீசுகிறது. விருதுநகர் தொகுதியில் மோடி அலை, வைகோ அலை என்று இரண்டு அலைகள் இருக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மகன் துரை வையாபுரி கூறியுள்ளார். சிவகாசியில் இருசக்கர வாகனப் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து, வைகோ அவர்களின் மகன் துரை வையாபுரி செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறியதாவது: விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சிவகாசி மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் இருசக்கர வாகனப் பிரச்சாரம் செய்வதற்காக முன்னூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூடியிருக்கிறார்கள்.
வைகோவுக்கு வாக்குகள் கேட்டு நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அவர்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். இதில், கழகத் தோழர்களும், கூட்டணிக் கட்சித் தோழர்களும், எந்தக் கட்சியைச் சாராத இளைஞர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இரண்டு காரணங்களுக்காக வந்திருக்கிறார்கள்.
ஒன்று பிரதமராக மோடி வரவேண்டும், இரண்டாவது விருதுநகர் தொகுதியில் வைகோ வெற்றி பெற வேண்டும் என்பதுதான்.
வைகோ வெற்றி பெற்றால், இங்கு இருக்கக்கூடிய பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச்சக தொழில்களுக்கு நல்ல பாதுகாவலராக இருப்பார் என்ற நம்பிக்கையில் இவர்கள் வந்திருக்கிறார்கள்.
இந்தியா முழுவதும் மோடி அலை. விருதுநகர் தொகுதியில் மோடி அலை, வைகோ அலை என்று இரண்டு அலைகள் இருக்கிறது.