கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணை நான்கு படையினர் கூட்டாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பின்னர் கொலை செய்தனர் என்ற விடயம் அம்பலமாகியுள்ளது. நிலமை இவ்வாறிருக்க தற்போது இந்தக் கொலைக்கு குறித்த பெண்ணின் காதலன் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
கிளிநொச்சி புன்னை நீராவியடியிலுள்ள கிணறொன்றிலிருந்து கடந்த 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது. மாத்தறையைச் சேர்ந்த ராஜசுலோசினி (வயது-38) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார். இந்தப் பெண் புன்னை நீராவியடியில் உள்ள படை முகாமில் சிவில் பாதுகாப்பு படையினனாக பணியாற்றிய ஒருவரைக் காதலித்து வந்தார். புதுவருட தினத்தை அவருடன் கொண்டாடுவதற்காக அவர் மாத்தறையிலிருந்து கிளிநொச்சிக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் இவர் புன்னை நீராவியடிக்கு வந்த போது இவரை மறித்து விசாரணை மேற்கொண்ட படையினர் அவரை மறைவான இடத்திற்கு கொண்டு சென்று நான்கு படையினர் மாறி மாறி வல்லுறுவுக்குட்படுத்தியுள்ளனர். இதன் பின்னர் அவரது கழுத்தை வெட்டிக் கொலை செய்து கிணற்றில் வீசினர். குறித்த கிணறு அமைந்திருந்த இடத்தில் சம்பவத்திற்கு முதல்நாள் மாலை வேளையும் இரவும் நான்கு படையினர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியதை தாங்கள் கண்டதாக பிரதேச மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இதேவேளை, குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு காவல்துறையினர் மோப்ப நாயைக் கொண்டுவந்தபோது அந்த நாய் மேற்படி படையினர் தங்கியிருந்த முகாமுக்குள் ஓடிச்சென்று அவர்களை அடையாளம் காட்டிய போதிலும் அவர்களைக் கைது செய்யாத காவல்துறையினர் மரணமான பெண்ணின் காதலனையே கைது செய்துள்ளதாகவும் மக்கள் தெரிவித்திருகின்றனர்.