April 23, 2014

தமிழ் அமைப்புகள் தடை: இலங்கையிடம் விளக்கம் கோரும் சர்வதேசம்!

இலங்கையில் உள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு நிதியுதவி வழங்குவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் தடை குறித்து சர்வதேச சமூகம் அரசாங்கத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.

ஐ.நா பாதுகாப்புச் சபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு அமையவே இந்த அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

அத்துடன் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நபர்களின் பெயர் பட்டியலையும் அரசாங்கம் வெளியிட்டது. அதேவேளை புலிகளின் அமைப்புக்கு மீண்டும் உயிரூட்ட முயற்சித்தனர் என குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில், சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படும் மூன்று நபர்கள் பற்றியும் சர்வதேச சமூகம் விசாரித்துள்ளது.

இந்த விடயம் சம்பந்தமாக கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளுக்கு தெளிவுப்படுத்த பாதுகாப்பு அமைச்சும், வெளிவிவகார அமைச்சும் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது.