கிளிநொச்சியில் தருமபுரத்தில் கைது செய்யப்பட்ட 13 வயதான விபூஷிகா குற்றச்சாட்டுக்கள் ஏதுமின்றி விடுவிக்கப்பட்டுவிட்டதாக முன்னெடுக்கப்பட்டு வந்த பொய்ப்பிரச்சாரம் அம்பலமாகியுள்ளது.குறித்த சிறுமியையும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் சந்தேக நபராகவே தமது குற்றப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
கிளிநொச்சி தருமபுரத்தில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து, 13 வயதான விபூசிகா மற்றும் அவரது தயார் ஜெயகுமாரி ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபரைத் துரத்திச் சென்றபோது, அவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார் என்று இலங்கை அரசினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறித்த சந்தேக நபருக்கு அடைக்கலம் கொடுத்தமை மற்றும் அவர்களுடைய வீட்டிலிருந்து, நிலத்தின் கீழ் இருப் பவற்றைக் கண்டறியும் கருவி மீட்கப்பட்டமை என்பன தொடர்பிலேயே ஜெயக்குமாரி மற்றும் மகள் விபூசிகா இருவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
இவர்களைக் கைது செய்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் வவுனியாவில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு விட்டு மறு நாள் 14 ஆம் திகதி இரவு கிளி நொச்சி நீதிமன்ற பதில் நீதிவானின் வீட்டில் முற்படுத்தினர். அதனையடுத்து தாயார் ஜெயகுமாரியை 18 நாள் பூஸாவில் தடுத்து வைத்து விசாரிக்கவும், விபூசிகாவை மருத்துவ மனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவும் உத்தரவிட்டிருந்தார். இதன் பின்னர் இரு நாள் மருத்துவ மனையில் தங்க வைக்கப்பட்டிருந்த விபூசிகா மீளவும் கிளி நொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டிருந்தார். இதன் போது அவரை கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தில் தற்காலிகமாக தங்க வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.