சிறிசங்கபோதியை ஒரு கோத்தா அழித்தது போன்று தற்போது மஹிந்த அரசை அழிக்க இன்னொரு கோத்தாவா ? : விக்கிரமபாகு
அக்கால மன்னன் சிறி சங்கபோதியை அழிப்பதற்கு கோத்தா செயற்பட்டதைப் போன்று இன்று மஹிந்த அரசை அழிக்க ஒரு கோத்தா செயற்படுகின்றாரா என்று எண்ணத் தோன்றுகின்றது என நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெலிவேரிய சம்பவத்தின் பின்னணியில் பாதுகாப்புச் செயலர் உள்ளார். ஏனெனில் இச்சம்பவத்தில் இராணுவத்தினர் சம்பந்தப்பட்டமை அனைவரும் அறிந்த விடயமே.
எனவே இதற்கு பொறுப்புக் கூறாது பாதுகாப்புச் செயலர் உள்ளமையானது அக்காலத்தில் சங்கபோதி மன்னனை அழிக்க கோத்தா செயற்பட்டதைப் போன்று தற்காலத்திலும் ஒரு கோத்தா உள்ளாரா என எண்ணத் தோன்றுகின்றது.
ஐ. நா. செயலர் நவநீதம்பிள்ளை இலங்கை வரவுள்ள நிலையில் இவ்வாறான செற்பாட்டின் மூலம் அரசாங்கம் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டை நிரூபித்துள்ளது.
சிங்கள் பௌத்தத்தை பாவித்து மக்களை கொலை செய்வதற்கு கூட இந்த அரசாங்கம் துணிந்து விட்டது. நாட்டில் உள்ள அனைத்து மக்களும் சிந்தித்து இந்த பாஸிச ஆட்சிக்கு எதிராக போராட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment