May 26, 2013

காதி நீதிமன்றம் எதற்கு ? : ஞானசார தேரர் கேள்வி

நாட்டில் நீதிமன்றம் ஒன்று இருக்கையில் காதி நீதிமன்றம் ஒன்று தேவையாவென பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கேள்வியெழுப்பியதுடன் இந்த நீதிமன்றத்தில் தான் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் சட்ட அங்கீகாரம் கிடைக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சம்புத்தத்வ ஜயந்தி மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது ஒரு பௌத்த நாடு. இங்கு எல்லா மதங்களுக்கும் கௌரவம் அளிக்கப்படுகின்றது. நாட்டில் நீதிமன்றம் ஒன்று செயற்படுகின்ற வேளையில் ஏன் தனியான காதி நீதிமன்றம் ஒன்று இயங்குகின்றது. அங்கு தான் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் சட்ட அங்கீகாரம் கிடைக்கின்றது.
இந்நிலையில் ஒவ்வொரு மதங்களுக்கென்றும் தனியான திணைக்களங்கள் இருக்கின்றன. ஆனால் பௌத்த பிரிவில் அவ்வாறில்லாது சர்வ மத பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
சர்வ மத அமைப்பு என்ற போர்வையில் பௌத்த மதத்தை ஒருபோதும் சீரழிக்க விட முடியாதென அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment