யாழ்ப்பாணத்தில் உதயன் நாளிதழ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மூலம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அமெரிக்கா கண்டனத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளது.
வொசிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பதில் பிரதிப் பேச்சாளர் பற்றிக் வென்ரெல்லிடம் உதயன் மீதான தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “சிறிலங்காவில் உதயன் நாளிதழ் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நாம் கண்டிக்கிறோம். உதயன் நாளிதழ் மீதும், பொதுவாக ஊடகங்கள் மீதும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில், ஆகப்பிந்தி நடந்துள்ள சம்பவமே இது. சிறிலங்காவில் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்துக்கு உள்ள அச்சுறுத்தல் குறித்து நாம் தொடர்ந்தும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம் என்பதை நான் பலமுறை கூறிவிட்டேன். கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தைப் பாதுகாக்கும்படியும், நம்பகமான விசாரணை நடத்தும்படியும், குற்றவாளிகளைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்கும்படியும் சிறிலங்கா அதிகாரிகளை நாம் கேட்டுக் கொள்கிறோம். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் ஊடக சுதந்திரத்துக்கான ஆதரவும் ஒன்றாகும். அண்மைய ஜெனிவா தீர்மானத்தின் ஒரு பகுதியாகவும் இது உள்ளது. சிறிலங்காவில் உள்ள எமது தூதரகம் மூலம் இந்த விவகாரம் குறித்து சிறிலங்கா அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக நான் அறிகிறேன்“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment