தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் மற்றும் விடுதலைப் புலிகளின் ஈழ எழுர்ச்சிப் பாடல்களை கையடக்கத் தொலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கோண்டாவில் பகுதியில் வைத்து கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. இதில் கோண்டாவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த விஸ்வலிங்கம் அகிலன் (வயது 26) என்ற இளைஞரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டவரென்று தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பகுதியிலுள்ள சனசமூக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வின் இரவுக் கலை நிகழ்வின் போது ஈ.பி.டி.பி யின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் நிகழ்விற்கு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
நிகழ்வினை முடித்துக் கொண்டு இவர் சென்ற பின்னர் குறித்த இடத்தில் சனசமூக நிலைய நிர்வாக சபையினரும் இரவு நிகழ்வினை நடாத்தியவர்களுக்கும் இடையில் கைகலப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது நிகழ்வினை குறித்த இளைஞர் படம்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் கோப்பாய் பொலிஸாரால் அவர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட போது அவரது கையடக்கத் தொலைபேசியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் மற்றும் ஈழ எழுர்ச்சிப் பாடல்களை வைத்திருந்ததாக இவர் மீது குற்றஞ்சாட்டப்படுகின்றது.
ஆனால் அவ்வாறு எவரையும் தாங்கள் கைது செய்யவில்லையென கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment