April 22, 2013

போர்க்குற்றங்களை விசாரிக்க ஆணைக்குழு நியமிக்க அரசு ஆலோசனை! - சிங்கள ஊடகம்

அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்படும் அனைத்துலக மனிதாபிமானச்சட்ட மீறல்கள் குறித்து உண்மை கண்டறியும் ஆணைக்குழுவொன்றை நியமிப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம் ஆலோசித்து வருவதாக, 'லங்காதீப' சிங்கள வாரஇதழ் தெரிவித்துள்ளது.

நம்பகமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி 'லங்காதீப' வெளியிட்டுள்ள செய்தியில், விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரச படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக அனைத்துலக சமூகம் கூறிவரும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே இலங்கை அரசாங்கம் இந்த நகர்வில் ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொறுப்புக்கூறல் விவகாரத்தை அடிப்படையாக வைத்து இலங்கை மீது பொருளாதார அழுத்தங்களைக் கொடுக்க அனைத்துலக சமூகம் திட்டமிட்டுள்ளதாக இலங்கை அரசின் ஆலோசகர்கள் கருதுகின்றனர்.

இதனடிப்படையில், இலங்கை அரசாங்கம் தென்னாபிரிக்காவின் உண்மை ஆணைக்குழுவைப் போன்றதொரு ஆணைக்குழுவை நியமிக்க முடிவுசெய்துள்ளது.

இந்த ஆணைக்குழுவில் சமயத் தலைவர்கள், கல்வியாளர்கள், சட்டநிபுணர்கள் இடம்பெறுவர்.

இந்த ஆணைக்குழு போரில் குற்றங்கள் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதுடன் இன நல்லிணக்கத்துக்கான பரிந்துரைகளையும் முன்வைக்கும் என்றும் 'லங்காதீப' செய்தி வெளியிட்டுள்ளது.

போர் முடிவுக்கு வந்த பின்னர், அனைத்துலக அழுத்தங்களினால், உண்மை நல்லிணிக்க ஆணைக்குழுவை இலங்கை அரசாங்கம் 2010ம் ஆண்டு நியமித்திருந்தது.

கடந்த 2011ம் ஆண்டு நொவம்பரில் வெளியிடப்பட்ட இந்த ஆணைக்குழுவின் அறிக்கையை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் தவறி வருகிறது.

இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தும் படி அனைத்துலக சமூகம் இலங்கைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment