Latest News

October 08, 2017

தமிழர் பொதுவாக்கெடுப்புக்கான பரப்புரை இயக்கத்துக்கு பிரதமர் ருத்ரகுமாரன் தலைமையில் செயற்குழு!
by admin - 0

தமிழர் பொதுவாக்கெடுப்புக்கான பரப்புரை இயக்கத்துக்கு பிரதமர் ருத்ரகுமாரன் தலைமையில் செயற்குழு!
tgte

இவ் விடயம் தொடர்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் இயங்கும் அரசியல் அமைப்புகளுடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நேரடியான தொடர்புகளை மேற்கொள்ளும்

NEW YORK, USA, October 6, 2017 /EINPresswire.com/ --

இலங்கைத்தீவின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு ஈழத் தாயகப்பகுதிகளிலும்,ஈழத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பொதுமக்கள் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்ற அரசியற் பரப்புரை இயக்கத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலகமெங்கும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Yes to referendum என்ற பெயரில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெருஞ்செயற் திட்டங்களில் ஒன்றாக உள்ளடக்கப்பட்டிருந்த இச் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்ரகுமாரன் தலைமையில் ஒரு செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை ஒருங்கிணைத்து வழிநடாத்துவதற்கு பிரதமர் பணிமனையில் ஒருங்கிணைப்புச் செயலகமும் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழீழ மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் சிங்களத்தின் இனவழிப்பில்இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஈடுசெய் நீதியின் அடிப்படையிலும் தமிழீழ மக்கள் தமக்கென இறைமையும் சுதந்திரமும் கொண்ட தனிநாட்டை அமைத்துக் கொள்வதற்கான அனைத்து உரித்தையும் கொண்டவர்கள் என்பதே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாடாக இருந்து வருகிறது. இந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழீழ மக்கள் தமது சுயநிர்ணய உரிமையினை வெளிப்படுத்தும் ஜனநாயக வழிமுறையாகவே இப் பொதுவாக்கெடுப்பை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கருதுகிறது.

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியற்தீர்வாகத் தமிழீழத் தனியரசு உட்பட்ட தீர்வுத்திட்டமுன்மொழிவுகள் தமிழீழ மக்களின்முன்வைக்கப்பட்டு, அவற்றினிடையே பொதுவாக்கெடுப்பின் மூலம் மக்கள் வெளிப்படுத்தும் ஜனநாயக முடிவுக்கு ஏற்ப அரசியற்தீர்வு காணப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு அனைத்துலக ஆதரவினைத் திரட்டும் பணியினை இவ் அரசியற்பரப்புரை இயக்கம் மேற்கொள்ளும்.

அண்மையில் நடைபெற்று முடிந்த குர்திஸ்தான், கத்தலோனியா பொதுமக்கள் வாக்கெடுப்புகள் நமக்கு ஒரு தெளிவான செய்தியினைத் தெரிவிக்கின்றன. விடுதலைக்கு அவாவும் மக்களே அதற்கான பொறிமுறையையும் கையிலெடுத்து தமது சுதந்திர வேட்கையினை முன்னோக்கித் தள்ளவேண்டும் என்பதே அச் செய்தியாகும்.

தமிழீழ மக்களும் பொதுவாக்கெடுப்பு என்ற பொறிமுறையினைத் தமது கையில் எடுத்தாக வேண்டும். பொதுவாக்கெடுப்பு நடாத்துவதற்கான ஒரு சூழல் கனியும்வரை ஒரு பொதுவாக்கெடுப்பின் அடிப்படையிலேயே அரசியல் தீர்வு அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டைத் தமிழ் மக்கள் அழுத்தமாக வலியுறுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

இவ் அரசியற்பரப்புரை வேலைத்திட்டத்துக்கான முன்னெடுப்பினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டுள்ள போதும் இதனை அனைத்துத் தமிழ் அமைப்புகளும் இணைந்தவகையில் மேற்கொள்வதற்கான அழைப்பையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இத் தருணத்தில் வெளியிடுகிறது.

இவ் விடயம் தொடர்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் இயங்கும் அரசியல் அமைப்புகளுடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நேரடியான தொடர்புகளை மேற்கொள்ளும்.

இவ் அரசியல் பரப்புரை இயக்கத்தில் ஈழத்தாயகமும் தமிழகமும் இணைந்து கொள்ளுதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒரு பொதுவாக்கெடுப்பின் அடிப்படையில் அரசியல்தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கை சிறிலங்காவின் அரசியலமைப்பின் ஆறாவது திருத்தத்துக்கு முரணானது அல்ல. இதனால் சட்டவரையறை என்ற அச்சம் தவிர்த்து ஈழத்தாயகத்தில் இப் பரப்புரை இயக்கத்தினை மேற்கொள்வது சாத்தியமானதே.

இத்தகைய ஒரு பொதுவாக்கெடுப்பினை நடாத்துவதின் நடைமுறைச்சாத்தியம் குறித்த கேள்வி மக்கள் மத்தியில் இருப்பதனையும் நாம் அறிவோம். இவ் விடயத்தில் எமது கருத்து இதுதான்.

ஈழத் தமிழ்மக்கள் ஒரு தேசம் என்ற தகுதியினை அனைத்துலகச்சட்டங்களின் அடிப்படையில் 
கொண்டுள்ளனர். இத் தகுதிக்கான அங்கீகாரத்தை நாம் அனைத்துலக சமூகத்திடம் கோருகின்றோம்.

இதனை வெளிப்படுத்தும் ஒரு வடிவம்தான் இப் பொதுமக்கள் வாக்கெடுப்புக்கான அரசியற்பரப்புரை இயக்கம். உலக அரசியல் நீதியின் அச்சில் சுழல்வதில்லை. மாறாக நலன்களின் அச்சிலேயே சுழல்கிறது. ஈழத் தமிழ் மக்களுக்கு வாய்ப்பான ஒரு அரசியற்சூழல் வரும்போது ஒரு பொதுசனவாக்கெடுப்பினை நடாத்துவதற்கான வாய்ப்பும் நமக்குக் கிடைக்கும். அதுவரை எமது சுதந்திரவேட்கையினை உலகுக்கு முரசறைந்து கொண்டிருப்பது அவசியமானதாகும்.

இப் பரப்புரை இயக்கத்துக்கான ஆதரவினை வழங்குமாறு உலகத்தமிழ் மக்களைக் கோருவதுடன் இப் பரப்புரை இயக்கத்துடன் இணைந்து செயற்பட முன்வருமாறும் தோழமையுடன் வேண்டிக் கொள்கிறோம்.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாதம் ஊடகசேவை

Contact: pmo@tgte.org

Transnational Government of Tamil Eelam
TGTE
email us here
« PREV
NEXT »

No comments