Latest News

August 29, 2016

இந்தியாவில் அரங்கேறும் அவலம்-பஸ்ஸில் இறந்த பெண்ணின் சடலத்துடன் நடுவழியில் இறக்கிவிடப்பட்ட கணவர்
by admin - 0


மத்தியப் பிரதேச மாநிலம், தாமோ மாவட்டம், செயின்புரா பர்சாய் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை நடந்தது. ஆனால் நேற்று தான் இது வெளியுலகுக்குத் தெரியவந்தது.

சத்தர்பூர் மாவட்டம், கோக்ரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்சிங் லோதி. இவரது மனைவி மல்லி பாய் (35). கடந்த வார இறுதியில் மல்லி பாய்க்கு குழந்தை பிறந்துள்ளது. இதனால் உடல்நலக்குறைவு ஏற்பட்ட மல்லி பாயை தாமோ மாவட்ட மருத்துவ மனைக்கு ராம்சிங் கடந்த வியாழக் கிழமை பஸ்ஸில் அழைத்துச் சென்றார். இந்நிலையில் வழியி லேயே மல்லி பாய் உயிரிழந்தார்.

மல்லி பாய் இறந்தது பற்றி நடத்துநர் ஷார்தா பிரசாத், டிரைவர் அமர்லால், உதவியாளர் தர்மேந்திரா ஆகிய மூவருக்கும் தெரியவந்ததும் செயின்புரா பர்சாய் கிராமம் அருகே மாலை 5.30 மணியளவில் பஸ்ஸை நிறுத்தி யுள்ளனர். மனைவியின் உடலுடன் கீழே இறங்குமாறு ராம்சிங்கிடம் கூறியுள்ளனர். ஆனால் தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்குமாறு ராம்சிங், அவரது மாமியார் கெஞ்சிக் கேட்டுக்கொண்ட பிறகும் இதை மூவரும் ஏற்கவில்லை. இவர்களை கட்டாயமாக பஸ்ஸில் இருந்து இறக்கிவிட்டுள்ளனர்.

அங்கு சுமார் 1 மணி நேரம் உதவி கிடைக்காமல் ராம்சிங் தனது மனைவியின் சடலத்துடனும் கையில் 5 நாள் குழந்தையுடனும் தவித்துள்ளார். இந்நிலையில் மிருதுஞ்சய் ஹசாரி, ராஜேஷ் படேல் என்ற 2 வழக்கறிஞர்கள் தாமோ நகரில் இருந்து வீடு திரும் பும் வழியில் ராம்சிங் நிலையை அறிந்தனர். உடனே அவர்கள் 100-க்கு அழைத்துள்ளனர். ஆனால் எந்த பதிலும் இல்லை. இதையடுத்து தனி வாகனம் ஏற்பாடு செய்து உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து மாநில மனித உரிமை ஆணையம், வட்டார போக்குவரத்து அதிகாரி மற்றும் டிஜிபியிடம் அந்த வழக்கறிஞர்கள் புகார் அளித்துள்ளனர்.

இதனிடையே “ராம் சிங்கை நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. அவராகத்தான் பஸ்ஸில் இருந்து இறங்கினார்” என பஸ் ஊழியர்கள் கூறியுள்ளனர்.

« PREV
NEXT »

No comments