Latest News

May 09, 2016

யாழ். வாள்வெட்டுச் சம்பவங்களின் பிரதான சூத்திரதாரி கைது
by admin - 0

யாழில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் கைதான ஐவர் கொண்ட கும்பலில் அண்மையில் தட்டாதெருச் சந்திப்பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான செந்தூரனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற கொள்ளை, வாள்வெட்டு, வழிப்பறி ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஐந்து சந்தேகநபர்கள் யாழ்ப்பாண விசேட குற்றத்தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள், 3 வாள்கள், கைக்கோடரிகள், இரும்புக் கம்பிகள், பொல்லுகள் என்பன மீட்கப்பட்டன.

யாழ். இந்துக் கல்லூரியின் உயர்தரத்தில் கல்வி பயிலும் இரத்தினசிங்கம் செந்தூரன் என்பவரே பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபராவார்.  இவரின்  வழிநடத்தலின் கீழ், பழிவாங்கும் செயற்பாடுகளில் இந்தக் கும்பல் முன்னர் ஈடுபட்டதுடன், காலப்போக்கில் கொள்ளை நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளது. இவர்களுடன் மேலும் பல சந்தேகநபர்கள் தொடர்புபட்டுள்ளனர். இந்தக் கும்பலின் பின்னணியில் செயற்படும் குறித்த நபர் யாழ்.நகரின் ஒட்டுமொத்த குற்றச் செயல்களின் தலைவனாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம், நாயன்மார்கட்டு பகுதியிலுள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து அங்கிருந்த இருவர் மீது வாள்வெட்டை மேற்கொண்டமை, மோட்டார் சைக்கிள் திருடிச் சென்றமை, வழிப்பறிக் கொள்ளை, களவு, சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதியில் ஒருவரை வாளால் வெட்டி மோட்டார் சைக்கிள் பறித்துச் சென்றமை, சுண்டுக்குளி பகுதியில், தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் சொகுசு பஸ்ஸின் கண்ணாடியை உடைத்தமை, ஆனைக்கோட்டைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடியமை, முதலி கோயில் கொக்குவில் பகுதியில் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிளினை கோடரியால் கொத்தி சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச் செயல்களில் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல குற்றச்செயல்களில் நீண்டநாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
« PREV
NEXT »

No comments