Latest News

February 01, 2016

மகிந்த ராஜபக்சவை கைது செய்வதற்கு மைத்திரி அரசு தயங்குவதற்கான காரணம் என்ன? இராணுவம் யாருடைய கட்டுப்பாட்டில் ?
by admin - 0

இலங்கை அரசியலில் இப்பொழுது பரபரப்புக்கு பஞ்சமில்லை. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது செல்வப்புதல்வன் யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்ட விவகாரம் இப்பொழுது இலங்கையில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் பேசப்படும் சம்பவமாக மாறியுள்ளது.
மைத்திரிபால சிறிசேன ஆட்சி பொறுப்பை ஏற்று ஓராண்டு நிறைவடைந்து ஒருடமும், ஒரு மாதமும் கடந்துள்ளன.

இந்நிலையில் கடந்த ஆண்டு, மகிந்தவின் தம்பி பசில் ராஜபக்ச கைது செய்யப்பட்டார். பின்னர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். அடுத்தடுத்து, மகிந்தவும். அவரது மனைவியும், செல்லத்தம்பி கோத்தபாய ராஜபக்சவும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுக் கொண்டு தான் இருந்தனர்.

எனினும் கைது செய்வதற்கான சூழல் எதுவும் அப்பொழுது இருந்ததாக தெரியவில்லை. ஆனால் நேற்றைய தினம் திடீரென்று மைத்திரிபால சிறிசேன யோசித ராஜபக்சவை கைது செய்யும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டியிருக்கின்றார்.

அதுவும் இந்த ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற இருக்கின்ற இந்த சூழ்நிலையில் மகிந்தவின் குடும்பத்தின் முக்கியமான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பௌத்த மத வழிபாட்டிற்காக சென்ற மைத்திரிபால சிறிசேன அங்கிருந்து கொண்டு கைது செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தார் என செய்திகள் வெளியாகியிருந்தன.

இக் கைது நடவடிக்கைகளும், அதனைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்சவின் கலக்கங்களும் ஒருபுறமிருக்க, மைத்திரிபால சிறிசேன பயந்த சம்பவம் ஒன்றும் நிகழ்ந்துள்ளது. மத வழிபாட்டிற்காக மகிந்த ராஜபக்ச உலங்கு வானூர்தியில் சென்று இருக்கின்றார்.

ஆனால் அவர் புறப்பட்டு செல்லும் பொழுது யோசித ராஜபக்ச கைது செய்யப்படவில்லை. திரும்பி வரும் பொழுது கைது செய்யப்பட்டு பொலிஸாரின் காவலில் கொண்டு வரப்பட்டார்.

இந்நிலையிலேயே திரும்பிவரும் பொழுது மைத்திரிபால சிறிசேன உலங்குவானூர்தியில் வருவதற்கு பயந்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த பயத்திற்கான காரணம் இல்லாமலும் இல்லை. இந்த நாட்டை ஆட்சி செய்து சிங்கள மக்களுக்காக நாடு முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தவர் மகிந்த ராஜபக்ச.

மகிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் யோசித ராஜபக்சவை கடற்படையில் இணைத்துக்கொண்டார். இந்நிலையில் இராணுவ பின்புலத்தில் மகிந்தவிற்கும், அவரது புதல்வர்கள், சகோதரர்களுக்கு இன்னமும் ஆதரவு இருக்கின்றது என்பதை மைத்திரிபால சிறிசேன மறந்துவிடவில்லை.

உண்மையில் இலங்கை இராணுவம் அரசாங்கத்திற்கு கீழ் கட்டுப்பட்டதா என்பது சந்தேக? இலங்கை இராணுவம் அரசாங்கத்தின் கீழ் கட்டுப்பட்டதாக இருப்பின் வடக்கு கிழக்கில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை விட்டுவிலகும்படி ஜனாதிபதி உத்தரவுவிட்டு இருப்பார்.

மீள்குடியேற்ற அமைச்சரின் கருத்துப்படி மக்களை மீள்குடியேற்றுவதில் சிக்கலில்லை. ஆனால் இராணுவத்தினர் காணிகளை விடுதலை செய்வதற்கு இணங்க வேண்டும் என்று கருத்துரைத்திருந்தார்.

ஆக! தற்போதுள்ள இலங்கை அரசாங்கத்திற்கும் இராணுவத்தினரின் பெரும்பகுதியினர் கட்டுப்படவில்லை என்பதை அவதானிக்க முடிகின்றது.

சிங்கள மக்களின் மீட்பராகிய மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்ட விடையத்தினை அறிந்தால் இராணுவ எதிர்ப்பின் விளைவால் ஏதோனும் சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்று ஜனாதிபதி நினைத்திருக்க கூடும். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இந்தியாவின் முன்னாள் பிரமர் ராஜீவ் காந்தி மீது இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் அணிவகுப்பின் போது தனது துப்பாக்கியால் தலையில் பலமாக தாக்கினார்.

அதாவது அன்றைய காலகட்டத்தில் இலங்கையை பிரிக்க இந்தியா சூழ்ச்சி செய்வதாக ஒரு கருத்து நிலவி வந்தது. இதன் எதிரொலியே ராஜீவ் காந்தி மீதான தாக்குதல்.

ஆயினும் வழமையைப் போன்று இலங்கை அரசாங்கம் தனது வியாக்கியானத்தை கொடுத்தது. தாக்கிய சிப்பாய் மனநோயாளி என்றும். அவர் தெரிந்தே தாக்கவில்லை என்றும் கூறியிருந்தது.

இதே நிலமை தனக்கும் ஏற்படலாம் எனும் பட்டறிவோடு மைத்திரிபால சிறிசேன பயந்திருக்க கூடும்.

எது எவ்வாறாயினும் இலங்கை இராணுவத்தினரிடத்தில் மகிந்த ராஜபக்சவிற்கு இருக்கும் செல்வாக்கு இன்னமும் குறையவில்லை என்பதே உண்மையாகும்.

இதன் விளைவின் ஒரு பகுதியே இதுவரை மகிந்த ராஜபக்சவை கைது செய்வதற்கு மைத்திரி அரசு தயங்குவதற்கான காரணமும் ஆகும்.
« PREV
NEXT »

No comments