Latest News

September 16, 2015

சட்டத்திற்கு புறம்பான கொலைகள், கொடூர பாலியல் வன்முறைகள், கடத்தல்கள் இடம்பெற்றுள்ளன
by Unknown - 0

யுத்த காலத்தில் இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியை அடைந்துகொள்வதற்குத் தேவையான ஒரு ஏற்பாடாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு “ஹைப்பிரிட்” என்ற கலப்பு சிறப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிப்பது முக்கியமாகும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் இருதரப்பினராலும் இழைக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டிற்கும் 2011 ஆம் ஆண்டிற்கும் இடையில் எண்ணற்ற சட்டத்திற்கு புறம்பான கொலைகள் இருதரப்பினர், மற்றும் பாதுகாப்பு படையினருடன் தொடர்புபட்ட ஆயுதக் குழுக்களால் செய்யப்பட்டுள்ளன என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீதிக்குப் புறம்பாக இழைக்கப்பட்டுள்ள கொலைகள் இனங்காணக்கூடிய வடிவங்களிலேயே நடைபெற்றுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினரின் சோதனைச் சாவடிகள் மற்றும் படைத்தளங்களுக்கு அருகாமையில் இறுதிக்கட்ட மோதல்களில் பிடிக்கப்பட்டோர் அல்லது சரணடைந்தோரை பாதுகாப்புப் படைகள் தடுத்து வைத்திருந்த நிலையில் அவர்களை சட்டத்திற்குப் புறம்பான முறையில் கொலை செய்தமை மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பாரபட்சமின்றி மக்கள் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியமை, கண்ணி வெடிகள் மூலம் கல்விமான்கள், மாற்றுக் கருத்துடைய தமிழ் அரசியல் பிரமுகர்களைக் குறிவைத்து கொலை செய்தமை என்பன இதற்கு உதாரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அத்துடன் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள சாதாரண பொதுமக்கள் சட்டத்திற்குப் புறம்பாக கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலியல் மற்றும் பால்நிலை சார்ந்த வன்முறைகள் குறித்தும் ஐ.நா அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், தடுத்து வைக்கப்பட்டோர் மீது பாதுகாப்புத் தரப்பினரால் குரூரமான பாலியல் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சிகரமான விடயத்தை விசாரணைக் குழு வெளிக்கொணர்ந்துள்ளது.

பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட முப்பது பேரிடம் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், இந்த செயற்பாடுகள் தனிப்பட்டவை அல்லவென்பதுடன், அதற்கு மாறாக சித்திரவதை செய்வதனை நோக்காகக்கொண்ட கொள்கையின் அடிப்படையில் திட்டமிட்டு பயன்படுத்தப்பட்ட பொறிமுறைகளாகும் என்பது தெளிவாவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பாலியல் வன்முறைகளை இழைத்தவர்களில் ஒருவர் கூட இதுவரை சட்டத்தினால் தண்டனைக்குட்படுத்தப்பட்டதாக அறியக்கிடைக்கவில்லை என ஐ.நா மனித உரிமைகள் விசாரணை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பலர் காணாமல் போயுள்ளமை பற்றியும், அவர்களின் இருப்பு தொடர்பில் இன்றுவரை கண்டறியப்படவில்லை என்பதனையும் நம்புவதற்கு காரணங்கள் உள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

யுத்தத்தோடு நேரடியாக தொடர்பில்லாத பலரும் வௌ்ளை வேன்களின் கடத்தப்பட்டு அதன்பின்னர் காணாமற்போயுள்ளதாக மனித உரிமைகள் விசாரணை அறிக்கை கூறியுள்ளது.

சித்திரவதைகள் மற்றும் வேறுவிதமான கொடுமையான மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமான நடத்தைகள் இடம்பெற்றுள்ளமை தொடர்பிலும் பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுத்தத்தின் இறுதிப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆட்களைக் கடத்தி வலுக்கட்டாயமாக ஆட்சேர்பிற்கு உட்படுத்தியதாக தகவல்கள் கிடைத்துள்ளதுடன், 2004 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட கருணா குழுவினரும் பரந்தளவில் சிறுவர்களை ஆட்சேர்ப்பு செய்து அவர்களை யுத்தத்திற்கு பயன்படுத்தியுள்ளமை ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாக ஐ.நா விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், அவை போர்க்குற்றங்களாகக் கருதப்படும் என்றும் அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் நடத்தப்பட்ட பல தாக்குதல்கள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கோட்பாடுகளுக்கு ஏற்ப அமையவில்லை என்பதை நம்புவதற்கு காரணங்கள் உள்ளதாகவும் ஐ.நா விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது.

யுத்த சூனிய வலயத்தின்மீது அரச படைகள் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதையும் இவ்வறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் பொதுமக்கள் இருக்கும் இடங்களில் இருந்து செயற்பட்டமை, யுத்தகளத்தில் வலுக்கட்டாயமாக பொதுமக்களை தடுத்து வைத்திருந்தமை என்பன சர்வதேச சட்டமீறலாகக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் வன்னி பிரதேசத்திற்கு உணவு உதவி மற்றும் மருத்துவப் பொருட்கள் சென்றடைவதை வேண்டுமென்றே தடுத்ததாக நம்புவதற்கான நியாயமான காரணங்களும் உள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஏறத்தாழ மூன்று இலட்சம் இடம்பெயர்ந்தோர், சர்வதேச சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட கால எல்லைக்கு மேலாக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை அவர்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் செயலாகும் எனவும் அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலைமையின் கீழ் ரோம் பிரகடனத்தில் இலங்கை அரசாங்கம் கையெழுத்திட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் விசாரணை அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவை கலைத்துவிட்டு, இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரத்தை நம்பகமான சுயாதீன நிறுவனமொன்றிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது அந்த அறிக்கையின் மற்றுமொரு பரிந்துரையாகும்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அலுவலகமொன்றை இலங்கையில் ஸ்தாபித்து, இந்த பரிந்துரைகள் செயற்படுத்தப்படுவதை கண்காணிப்பதற்கான பிரதிநிதிகள் குழுவொன்றை அனுப்புவதற்கான வசதிகளை ஏற்படுத்துமாறும் ஐ.நா விசாரணை அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முக்கிய பரிந்துரைகள் மற்றும் மனித உரிமைகள் ஆணையாளரின் கடந்தகால அறிக்கைகளின் சிபாரிசுகளைக் குறிப்பிட்ட காலவரையறைக்குள் செயற்படுத்தலை உறுதிப்படுத்துவதற்காக உயர்மட்டக் குழுவொன்றை நியமிக்குமாறும் ஐ.நா விசாரணை அறிக்கை கோரியுள்ளது.

யுத்த குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலைகள், சட்டவிரோதமாக காணாமற்போகச் செய்தமை என்பவற்றைக் குற்றங்களாகக் கருதும் வகையில் சட்டங்களை மீளாய்வு செய்யுமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் விசாரணை அறிக்கையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

உத்தேச கலப்பு சிறப்பு நீதிமன்றத்தை ஆரம்பித்த பின்னர், பாரதூரமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றங்கள், ஆட்கொணர்வு வழக்குகள் மற்றும் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணை அதிகாரம் அதனிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.



« PREV
NEXT »

No comments