Latest News

September 12, 2015

பிரித்தானியாவின் தொழிற்கட்சி புதிய தலைவராக இடதுசாரியும் தீவிர தமிழர் போராட்ட ஆதரவாளருமான ஜெரமி கோர்பின் தெரிவானார்.
by Unknown - 0

பிரித்தானியாவின் தொழிற்கட்சியின் புதிய தலைவராக இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நீண்டகாலமாக குரல் கொடுத்து வருபவரும் இடதுசாரி கொள்கைகளில் நம்பிக்கை உடையவருமான ஜெரமி கோர்பின் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று தெரிவாகி இருக்கிறார்.

1994 இல் நடைபெற்ற தொழிற்கட்சி தலைவர் பதவி தேர்தலில் ரொனி பிளையர் பெற்ற வாக்குகளை விடவும் எதிர்பாராத வகையில் 59.5 சதவீத வாக்குகளை பெற்று கோர்பின் தெரிவாகி இருக்கின்றமை சர்வதேச ஊடகங்களின் தலைப்பு செய்தியாகி இருக்கிறது. இவரை எதிர்த்து போட்டியிட்ட அண்டி புர்ன்ஹம் 19 சதவீத வாக்குகளையும், யுவட் கூப்பர் 17 சதவீத வாக்குகளையும், லிஸ் கெண்டல் 4.5 சத வீத வாக்குகளையும் மட்டுமே பெற்றனர்.

வெற்றிபெற்ற பின்னர் கருத்து வெளியிட்ட கோர்பின் இந்த தேர்தலில் தான் தெரிவாகி இருக்கின்றமை பிரித்தானியாவில் மக்கள் ‘அநீதி மற்றும் சமத்துவமின்மை’ குறித்து மக்கள் சலிப்படைந்து இருப்பதையே காட்டுவதாக கூறினார்.

தொழிற்கட்சியின் வரலாற்றில் இப்படி, எவரும் எதிர்பாராத வகையில் பெரும் வெற்றி பெற்ற அதுவும் இடதுசாரி கொள்கை உடைய தலைவர் கோர்பின் ஆவார்.

வடக்கு லண்டன் பகுதியை சேர்ந்த கோர்பின் ஈழத் தமிழ் மக்களுடன் மிக நெருங்கிய தொடர்புகளை பேணிவருகிறார். 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக இனக்கலவரம் நடைபெற்றபோது ஒரு இளம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்.

இலங்கையில் தமிழ் மக்களின் நலன்களின் பால் நேர்மையான அக்கறை கொண்ட கோர்பின், பிரித்தானியாவில் தமிழ் மக்கள் மேற்கொண்ட போராட்டங்கள், கூட்டங்கள், நினைவு நாட்கள் என்பவற்றில் தொடர்ச்சியாக கலந்துகொண்டு வந்தவர். பிரித்தானியாவின் தமிழ் மக்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் நீண்டகாலமாக உறுப்பினராக இருந்து வருகிறார்.

ஈராக்கில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் மேற்கொண்ட யுத்தத்தை கடுமையாக விமர்சித்துவந்த கோர்பின் பிரித்தானியாவில் பொதுமகக்ளுக்கான சலுகைகள் குறைக்கப்பட்டமைக்கு எதிராகவும் குரல் கொடுத்துவந்தார். அதேவேளை, அகதிகள் விடயத்திலும் அவர்களுக்காக குரல் கொடுத்து வந்தார். இன்று லண்டனில் அகதிகளுக்கு ஆதவராக நடைபெற்ற பேரணி ஒன்றிலும் அவர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

தனது வெற்றியின் பின்னர் ஊடகங்களின் செயற்பாடு குறித்து கருத்து வெளியிட்ட அவர், ஊடகங்களின் நடத்தை “தலையீடுசெய்வதாகவும், துஷ்பிரயோகதுக்குரியதாகவும், தவறானதாகவும்” இருந்ததாக கூறினார்.

தேர்தலில் தோற்றபின்னர் பதவி விலகிய முன்னாள் தொழிற்கட்சி தலைவர் எட் மிலபான்ட், கோர்பின் வெற்றி பெற்றமைக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளதுடன், அவருக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக கூறியிருக்கிறார்.

நன்றி ஈழம் ரஞ்சன்
« PREV
NEXT »

No comments