Latest News

September 08, 2015

பிரித்தானியாவில் தமிழினப்படுகொலைக்கு அனைத்துலக விசாரணையை வலியுறுத்தும் நீதிக்கானபோராட்டம்
by admin - 0

தமிழினத்தைத் தொடர்ச்சியாக கருவறுத்துக் கொண்டிருக்கும் சிறீலங்கா இனவாத அரசை அனைத்துலக நீதி விசாரணைக்கு உட்படுத்தக் கோரி லண்டனில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பாக,  நீதிக்கான மாபெரும் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாதம் (செப்டெம்பர்) 16ஆம் நாள் புதன்கிழமை மாலை 5 மணிக்கு  24 Grosvenor Square, W1A  2LQ  என்னும் முகவரியில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாகவே அனைத்துலக நீதி கோரிய இப்போராட்டம் நடத்தப்படவுள்ளது.
தமிழின அழிப்பை மேற்கொள்ளும் சிறீலங்கா இனவாத அரசு மீதான நீதி விசாரணையானது அனைத்துலக மட்டத்தில் நடத்தப்பட வேண்டும் எனப் பல்வேறு வழிகளிலும்  உலகெங்கும் தமிழர்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன், சர்வதேசப் பொறிமுறை ஒன்றினூடாகவே விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என வடமாகாண சபையிலும்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அனைத்துலக நீதி விசாரணையை வலியுறுத்தும் முகமாகவே இந்நீதிக்கான போராட்டம் நடைபெற உள்ளது. 
காலத் தேவையை உணர்ந்து காத்திரமான பணியாற்ற அனைத்துத் தமிழர்களும் ஒன்றுதிரண்டு உலகின் நீதிக்கதவுகளை உலுக்கித் தட்டவேண்டியது மிக மிக அவசியமாகும். இலங்கைத்தீவில்  சனநாயகம் தழைத்தோங்கி இருப்பதான தோற்றப்பாடு உருவாக்கப்பட்டுள்ளதே தவிர, தமிழ் மக்களின் வாழ்வியலில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை என்பதையும் மென்போக்கு அரசியலினூடாக சிங்கள இனவாத அரசு தமிழர்களின் உரிமைகளைக் காவு கொள்கின்றது  என்பதையும்  தமிழ் மக்கள் புரிந்து கொண்டு விழிப்போடு செயற்பட வேண்டியது அவசியமாகும்.
எனவே தொடர்ச்சியாகத் தமிழினக் கருவறுப்பைப் புரியும் சிறீலங்கா அரசு மீதான அனைத்துலக நீதிவிசாரணையை வலியுறுத்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அந்தவகையில் இம்மாதம் 16ஆம் நாள் லண்டனில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாக நடைபெற ஏற்பாடாகியிருக்கும் நீதிக்கான போராட்டத்தில் அனைத்துத் தமிழ் மக்களையும் கலந்து கொள்ளும்படி அழைக்கின்றோம் .
பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்.
தொடர்புகளுக்கு 02033719313
அமெரிக்கத் தூதரகத்துக்கு அருகிலுள்ள தொடருந்து நிலையம் Marble Arch , Bond Street.

« PREV
NEXT »

No comments