Latest News

September 02, 2015

உள்ளக விசாரணை காலத்தை இழுத்தடிக்கும் செயல் அதற்கு கூட்டமைப்பு துணைபோகக் கூடாது என்கிறார் -சுரேஸ்
by Unknown - 0

உள்ளக விசாரணை என்பது காலத்தை இழுத்தடிப்பு செய்து குற்றவாளிகளை பாதுகாக்கும் நடவடிக்கையாகவே இருக்கும் எனவே அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துணை போகக் கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். 

நீர்வேலியில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று  நண்பகல் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் ,
ஐ.நா மனித உரிமை ஆணையகத்தின் தீர்மானத்திற்கு அமைய விசாரணைகள் நடத்தப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வெளிவந்த பின்னர் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் ஊடாகவோ அல்லது சர்வதேச தீர்ப்பாயம் எனும் பொறிமுறை ஊடகவோ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அதேவேளை தற்போது சிலர் கூறுகின்றார்கள் சர்வதேச விசாரணை முடிவடைந்து விட்டதாக அது தவறான கூற்று அவ்வாறு எந்த விசாரணையும் முடிவடையவில்லை. 
விசாரணை அறிக்கை மாத்திரமே தயாராகியுள்ளது. 

உள்ளக விசாரணை தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்று தர மாட்டாது. இந்த குற்றங்களைச் செய்தவர்கள் அதனால் பாதிப்புக்கு உள்ளானவர்களின் இரத்த மாதிரிகள் பரிசோதித்தல், சனல் 4 வெளியிடப்பட்ட காணொளி ஆதாரங்கள் பரிசோதித்தல், கொல்லப்பட்டவர்களின் புதைகுழிகளை தோண்டி எழும்புக் கூடுகளை பரிசோதித்தல் ஆகியனவற்றை செய்ய கூடிய வசதிகள் இலங்கையில் இல்லை எனவே உள்ளக விசாரணை என்பது இலங்கையில் சாத்தியமற்றது. 

உள்ளக விசாரணை மூலம் உள்நாட்டிலே விசாரணைகள் நடத்தப்பட்டால் சாட்சியங்களுக்கான பாதுக்காப்புக்கு உத்தரவாதம் இருக்குமா? சாட்சியங்கள் பயமின்றி தமது சாட்சியங்களை கூறுவார்களா? என்ற கேள்விகளும் எழும்பும். 

எனவே அரசாங்கம் கூறும் உள்ளக விசாரணை என்பது காலத்தை இழுத்தடிப்பு செய்து குற்றவாளிகளை பாதுகாக்கும் நடவடிக்கையாகவே இருக்கும் அதற்கு தமிழ் தேசியகூட்டமைப்பு துணை போகக்கூடாது தேர்தல் காலத்தில் சர்வதேச விசாரணையே வேண்டும் என்றவர்கள் தேர்தல் முடிவடைந்த பின்னர் உள்ளக விசாரணையை ஏற்றுகொள்வது என்பது மக்கள் தந்த ஆணையை அவமதிப்பது போன்றது எனவே மக்கள் ஆணையை மதித்து சர்வதேச விசாரணையை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என தெரிவித்தார். 
« PREV
NEXT »

No comments