Latest News

September 08, 2015

மனித உயிர்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு ஐநாவுக்கு உள்ளது - மாகாண அமைச்சர் டெனிஸ்வரன்..
by admin - 0

ஐலானின் ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம்... மனித உயிர்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு ஐநாவுக்கு உள்ளது - மாகாண அமைச்சர் டெனிஸ்வரன்...

கடற்கரையில் உயிரிழந்து ஒதுங்கிய சிறுவன் ஐலானின் உடலும் அவனது தந்தையின் உள்ளக்குமறல்களும் ஒரு நிமிடம் உலகையே மனம் நெகிழச் செய்துவிட்டது.

சிரியாவின் உள்நாட்டுப்போர், அந்த நாட்டு மக்களின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கி விட்டது. அவர்களில் பலரும் தங்கள் மீதியான வாழ்க்கையை கழித்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தமான நிலையில், அண்டை நாடான துருக்கி வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்று கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அகதிகள் பிரச்சினையை ஐரோப்பிய நாடுகள் தீராத தலைவலியாக கருதுகின்றன. இதுவே இன்றைய நிலை.
இந்த நிலையில்தான் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமுள்ள கொபானி நகரில் உள்நாட்டுப் போருக்கு பயந்து, உயிர் பிழைப்பதற்காக ஏராளமானோர் கடந்த ஆண்டு துருக்கிக்கு சென்றனர். அங்கிருந்து அவர்கள் படகுகள் மூலமாக பாதுகாப்பற்ற பயணம் மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர்.

அப்படி துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டின் மோஸ் தீவுக்கு 2 படகுகளில் 23 அகதிகள் சென்றனர். ஆனால் அந்த படகுகள், துருக்கியில் பொத்ரும் நகருக்கு அருகே கவிழ்ந்து விட்டன. அவற்றில் 9 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். மற்றவர்கள் நடுக்கடலில் பலியாகினர். பலியானவர்களில் 5 பேர் பச்சிளங்குழந்தைகள்.

அப்படி பலியான ஒரு பிஞ்சுக் குழந்தையின் உயிரற்ற உடல், கரை ஒதுங்கிக்கிடந்த கோர காட்சியை துருக்கி செய்தி நிறுவனம் ஒன்று, ‘கரைக்கு அடித்துச்செல்லப்பட்டு விட்டது, மனிதாபிமானம்’ என்ற அடிக்குறிப்புடன் வெளியிட்டது குறிப்பிடவேண்டிய விடயம்.

எனவே அந்த குழந்தையின் இறப்பை ஒரு விபத்தாக கருதாமல் இது அகதிகளாக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்தின் அவலம் என்பதை உலக நாடுகள் உணர்ந்து உடனடியான ஓர் தீர்வினை எட்ட சிந்திக்கவேண்டும், இல்லையெனில் மீண்டும் உலகப்போர் உருவாகும் சாத்தியத்தை இச் சம்பவம் பிரசவித்துவிடும், இது போலவே எமது நாட்டிலும் யுத்தம் இடம்பெற்று இன அழிப்புகள் இடம்பெற்ற வேளையில் எத்தனை தடவை நாமும் சர்வதேசத்திடம் வேண்டுகோள் விடுத்தோம் அது பயனற்றே போனது, அதே போன்று இந்த விடயத்திலும் உலக நாடுகளும், ஐநாவும் கண்மூடித்தனமாக இருக்குமானால் இன்னும் எத்தனையோ மனித உயிர்களை நாம் இழக்க நேரிடும். ஆகவே சர்வதேசம் விரைந்து செயற்ப்படுவதன் ஊடாக உலகில் சமாதானத்தை ஏற்ப்படுத்தவேண்டும் என்றும், மேலும் இச் சம்பவம் குறித்து தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு, ஐலானின் ஆன்மா சாந்தியடைய அனைவரையும் இறைவனை பிரார்த்திக்குமாறும் அன்பாக வேண்டி நிற்கின்றார் வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள்.
« PREV
NEXT »

No comments